Skip to main content

“உண்மை எப்போதும் உண்மையாகவே இருக்கும்...” - ஆம் ஆத்மி தோல்வி குறித்து அன்னா ஹசாரே

Published on 08/02/2025 | Edited on 08/02/2025

 

Anna Hazare  comments on Aam Aadmi Party defeat

70 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 5ஆம் தேதி (05.02.2025) ஒரே கட்டமாக நடைபெற்றது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவியது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (08.02.2025) காலை 8 மணி முதல்  எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து கடும் போட்டி நிலவிவந்தது. அதன்படி மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக 47 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 23 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. முன்னதாக காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை வகித்த நிலையில் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதன் மூலம் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியமைக்கிறது.

அதேசமயம் புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியைச் சந்தித்துள்ளார். கெஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  எனவே டெல்லியின் முதல்வராக பர்வேஷ் வர்மா தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா தோல்வி அடைந்துள்ளார். கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளரும், முதல்வருமான அதிஷி வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி பெரும் பின்னடைவை சந்தித்ததற்கு சமூக ஆர்வலரும், அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் வழிக்காட்டியுமான அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் நல்ல குணம் இருக்க வேண்டும்; தூய்மையானவராக இருக்க வேண்டும். இதை நான் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறேன். ஆனால், ஆம் ஆத்மிக்கு அது புரியவில்லை. அவர்கள் மதுபான ஊழலில் சிக்கிக்கொண்டனர். அதன் காரணமாகவே, அரவிந்த் கெஜ்ரிவாலின் பிம்பம் சிதைந்தது. அதனால்தான் தேர்தலில் அவர்களுக்கு வாக்குகள் குறைவாக  கிடைக்கின்றன. நற்குணங்களின் முக்கியத்துவம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசுவதையும், மதுபான ஊழல் குற்றச்சாட்டில் அவர் சிக்கியதையும் மக்கள் பார்த்தார்கள். அரசியலில், குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். ஒருவர் தான் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். உண்மை எப்போதும் உண்மையாகவே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்