மக்களை ஏமாற்ற நினைப்பதை விட்டுவிட்டு நீட் தேர்விலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற தி.மு.கவும், அ.தி.மு.க.வும் உண்மையாக முயற்சிக்க வேண்டும் என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவச்செல்வங்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்வது பெரும் துயரத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்துகிறது.
நீட் தேர்வு வருவதற்குக் காரணமாக இருந்த தி.மு.கவும், அதனைச் செயல்படுத்திய பழனிசாமி அரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுவது போல நாடகம் ஆடுகிறார்களே தவிர நீட்தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க மறுப்பதால்தான் இந்தச் சோகம் தொடர்கிறது.
இனியாவது மக்களை ஏமாற்ற நினைப்பதை விட்டுவிட்டு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களைக் காப்பாற்ற அதிக எம்.பி.க்களை வைத்திருக்கும் தி.மு.கவும், அதிகாரத்தில் உள்ள பழனிசாமி அரசும் உண்மையாக முயற்சிக்க வேண்டும்.
அதே நேரத்தில், உயிரை விடுவது எதற்கும் தீர்வாக அமையாது; எல்லாவற்றையும் எதிர்கொண்டு, வைராக்கியத்தோடு போராடி வாழ்வில் வென்று காட்ட வேண்டுமே தவிர உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்திற்கே மாணவச் செல்வங்கள் செல்லக்கூடாது என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.