Skip to main content

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; திமுக வேட்பாளர் சந்திரகுமாரின் வெற்றி உறுதி!

Published on 08/02/2025 | Edited on 08/02/2025

 

Erode East by election DMK candidate Chandrakumar is sure of victory

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்த தொகுதிக்குக் கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிட்டனர். முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்டவை இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தன. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 08.15 முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

அதாவது காலை 08. 15 மணியளவில் தபால் வாக்குகள், எண்ணும் பணி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காலை 08.30 மணி முதல் மின்னணு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 14 மேசைகளில் வாக்கு எண்ணும் பணியில் 51 பேர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்புப் பணியில் சுமார் 600 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் 11 சுற்றுகள் முடிவில் 76 ஆயிரத்து 278 வாக்குகளைப் பெற்றுத் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பதிவான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் மேல் கடந்ததால் சந்திரகுமாரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 16 ஆயிரத்து 543 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 59 ஆயிரத்து 735 ஆக உள்ளது. இதற்கிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகிப்பதால் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திலும், ஈரோட்டில் வாக்கு எண்ணிக்கை மையத்திலும் திமுகவினர் பட்டாசு வெடித்தும், நடனமாடியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 

சார்ந்த செய்திகள்