விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் அறிமுகக் கூட்டம் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார். தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன், தனது வெற்றிக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வாக்கு சேகரித்துப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி. ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “இந்தத் தொகுதிக்குள் தான் எய்ம்ஸ் மருத்துவமனை, காமராஜர் பல்கலைகழகம், ஏர்போர்ட் எல்லாமே வருகிறது. எனவே இவை நமக்குத்தான் சொந்தம். மொத்தத்தில் தென்மாவட்ட மக்களின் கெப்பாசிட்டி தம்பி விஜய பிரபாகரன் கையில் உள்ளது. இவர் வெற்றிபெற்று எம்.பி. ஆவதை இனி யாராலும் தடுக்க முடியாது. தமிழர்களின் உரிமைக்காகவும் பெருமைக்காகவும் உழைக்கின்ற கட்சி அ.தி.மு.க.
அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி ராசியான கூட்டணி. தற்பொழுது உள்ள எஸ்.டி.பி.ஐ. இஸ்ஸாமிய அமைப்புகளில் மிகவும் வலிமையானது. அந்த அமைப்பு நமக்கு வலுவான துணையாக நிற்கிறது. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என மதம் பார்க்காமல் அனைவருக்கும் உழைத்த கட்சி அ.தி.மு.க. எங்களை இனத்தை, சொல்லி மதத்தைச் சொல்லி பிரிக்க முடியாது. சிவகாசியில் பேசிய இ.பி.எஸ். ஓங்கிய குரலில் கொட்டும் முரசுக்கு ஓட்டு கேட்டு முழங்கினார். அது டெல்லி வரைக்கும் ஒலித்திருக்கிறது. கூட்டணிக் கட்சிக்கு மரியாதை கொடுத்து அங்கீகரிக்கக் கூடிய கட்சி அ.தி.மு.க.. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழுக்காகப் பெருமை சேர்த்தவர். நாங்கள் தற்போது கூட்டணியில் இல்லாவிட்டாலும், அவர் அ.தி.மு.க. கூட்டணியில்தான் முதன் முதலில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூட்டணி என்றாலே முதலில் அமர்ந்து பேசிவிட வேண்டும். தொகுதிகள் சின்னம் ஆகியவற்றைச் சரியாக முடிவு செய்யவேண்டும். தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் பெயரில் பெரிய ராசி இருக்கிறது, வசியம் இருக்கிறது. அது எனக்கு நன்றாகத் தெரியும் அவர் வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அவர் ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தார் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். நாளை முதல் தொகுதியில் 100 இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் தேர்தலில் பிரச்சாரமே வேண்டாம் என்று ஒரு அணியும், ஓட்டு போட்டால் போடுங்கள் இல்லாவிட்டால் போங்க என்று ஒரு அணியும் சுற்றித் திரிகிறது. விஜயபிரபாகரன் வெற்றிக்கு அ.தி.மு.க. கூட்டணி கடுமையாக இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அவருடைய வெற்றிக்குப் பாலமாக இருக்கவேண்டும். உங்களுக்குத் தேவையானவற்றை அ.தி.மு.க. இயக்கம் செய்யும். அதற்கு நான் முழு பொறுப்பு. தம்பி விஜய பிரபாகரன் பொறுப்பு. அதிமுக அடுத்து ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.” என்றார்.