
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடம் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க. தலைமை ஒதுக்கியது. மேலும், பா.ஜ.க., தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
அதேபோல், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளையும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க. ஒதுக்கியிருந்தது. அதன், தொடர்ச்சியாக இன்று (04/03/2021) விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கியதற்கான, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் தி.மு.க.- வி.சி.க. இடையே கையெழுத்தானது. தி.மு.க.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே இன்று (04/03/2021) மாலையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, தி.மு.க. தலைமையிடம் 27 சட்டமன்றத் தொகுதிகளைக் கேட்டதாகவும், 22 சட்டமன்றத் தொகுதிகள் வரை தர தி.மு.க. தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் 18 சட்டமன்றத் தொகுதிகள் வரை தி.மு.க. ஒதுக்க முன்வந்த நிலையில், தற்போது 22 முதல் 27 சட்டமன்றத் தொகுதிகளுக்குள் தி.மு.க.- காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகிகளிடம் காங்கிரஸ் கட்சி கருத்துக் கேட்டு வரும் நிலையில், நாளை (05/03/2021) மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. தலைமை அழைப்பு விடுத்துள்ளது. நாளை (05/03/2021) நடைபெறும் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையில், தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டு, தி.மு.க. - காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.