Skip to main content

திமுகவை வீழ்த்த டிடிவியின் ஃபார்முலா; அமமுகவின் ஆறாம் ஆண்டு துவக்க விழாவில் உறுதிமொழி

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

TTV's formula to defeat DMK; Pledge of Allegiance at the Sixth Annual Festival of AMMK

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சியின் கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதன் பின் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “பிறரின் தூண்டுதலின் பேரில் தான் ஓபிஎஸ் தர்மயுத்தத்தை துவங்கினார். இப்பொழுது அவர் தனது தவறை உணர்ந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்கிறார். பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது தெரியும். அவர் ஜெயலலிதாவின் பாதையில் இருந்து விலகி தனியாகச் சென்றார். அதனால், வேறு வழியில்லாமல் உருவாக்கப்பட்டது தான் அமமுக. ஆனால், பழனிசாமிதான் எதிர்க்கட்சித் தலைவர். ஜெயலலிதாவை விட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதற்கு நான் சிரித்துக் கொண்டே பதிலளிக்க தகுந்த சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இதற்கு முன் அதிமுக ஜா-ஜெ எனப் பிரிந்திருந்த பொழுது தமிழகம் முழுவதும் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா, 28 இடங்களில் வெற்றி பெற்றார். அதில் ஈரோட்டில் மட்டும் 5 இடங்களில் வெற்றி பெற்றார். 

 

ஆனால், பழனிசாமி கம்பெனி நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. திமுகவிற்கு 60 மாதங்களில் வரவேண்டிய கெட்டப்பெயர் 20 மாதங்களில் வந்த பொழுதும் அதிமுகவால் அதை வாக்குகளாக மாற்ற முடியவில்லை. இன்று அவர்களிடத்தில் இரட்டை இலை இருக்கும் காரணத்தால் தான் அதிமுக தொண்டர்கள் வேறு வழியின்றி அங்கு இருக்கிறார்கள். அப்படி இருந்தும் தற்பொழுது தொண்டர்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை சின்னம் நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டாலும் அது பலவீனமடைந்துள்ளது. முதலமைச்சராக இருந்த போது மத்திய அரசின் உதவியுடன் ஆட்சியைக் காப்பாற்றியவர்கள் தற்போது ஆட்சியை இழந்துள்ளார்கள். பலவீனப்பட்டு உணர்ந்துதான் திருந்துவார்கள். திமுகவை வீழ்த்த ஓரணியில் கூட்டணியாக இணைந்து வீழ்த்துவோம் என்பது தான் அமமுகவின் ஆறாம் ஆண்டு உறுதிமொழி. 

 

சில நிர்வாகிகள் அமமுகவில் வருவதும் போவதுமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். சிலர் அரசியலுக்கே புதிதாக வந்து அமமுகவில் தான் பதவிகளைக் கொடுத்தோம். இன்னொரு கட்சிக்கு போவதற்கு அவர்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். அவர்கள் போன பின்பு அவர்கள் இடத்திற்கு அவர்களை விட திறமையான சிறப்பான நிர்வாகிகளை நியமிக்கிறோம். இங்கிருந்து வேறு கட்சிக்குச் சென்று அங்கே அவர்களுக்கு என்ன மரியாதை கிடைத்துவிடும் என்று எனக்குத் தெரியாது. இங்கு அவர்களை மரியாதையாகத்தான் வைத்திருந்தோம்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்