விரைந்து நீதி கிடைக்க கிராம நீதிமன்றங்களை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2008 ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி கிராமங்களில் நீதிமன்றம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் என கோரிக்கை கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் பொதுமக்களின் குறிப்பாக 76 சதவீதம் கிராமத்தில் வாழும் கிராம மக்களின் சிரமங்களை குறைத்து விரைவில் நீதி கிடைக்க கிராம நீதிமன்றங்களை அமைக்கும் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இன்று வரை 2008 ல் இயற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த மத்திய மாநில அரசுகள் முன் வரவில்லை.
மேலும் இந்த சட்டம் இயற்றப்பட்டது குறித்து கிராம மக்களுக்கு எந்தவித விழிப்புணர்வும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பெறுவதால் கிராம மக்களுக்கு வாய்தா இல்லாமல் விரைவில் நீதி கிடைக்கும் நிலை உருவாகும். மேலும் கிராமத்திற்கே நீதிபதிகள் வருவதால் வழக்கு வாய்தா இல்லாமல் வழக்குரைஞர்களின் உதவி இல்லாமல் வழக்குக்கு சம்பந்தபட்டவர்கள் தாங்களே கிராம நீதிமன்றங்களில் வழக்காட முடியும்.
மேலும் வழக்குக்காக ஒரு பைசா கூட கட்டணம் செலுத்த தேவையில்லை. தற்போதுள்ள நிலையில் நீதிமன்றத்தில் பல்வேறு காரணங்களால் 3.7 கோடி வழக்குகள் தேங்கி உள்ளது. இதன் மூலம் தாமதமாக வழங்கப்படும் நீதியால் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்திய மக்கள் தங்களது அடிப்படை சட்ட உரிமைகளை இழந்து வருகிறார்கள் என்பது கண்கூடு.
எனவே இதே நிலை தொடருமானால் 2040 ல் 15 கோடி வழக்குகள் தேங்கும் நிலை உருவாகி 15 கோடி குடும்பங்கள் நீதி தாமதமாக கிடைக்கும் நிலை உருவாகும் சூழல் உள்ளது என சமூக ஆர்வலர்கள் கவலை கொள்கின்றனர். இந்நிலை தொடராமல் இருக்க மத்திய மாநில அரசுகள் கிராம மக்களின் நலனில் அக்கறை கொண்டு அலைச்சலைப் போக்கும் பொருட்டும் வீண் பண மற்றும் கால விரயங்களை தவிர்க்கும் பொருட்டும் விரைந்து நீதி கிடைக்க கிராம நீதிமன்றங்களை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.