புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டி பல்வேறு கோரிக்கைகள் நீண்டகாலமாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது. மத்திய ஆட்சியாளர்களின் தயவிலேயே புதுச்சேரி மாநில அரசு இருப்பதால் மாநில அந்தஸ்து வேண்டி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மாநில அந்தஸ்து வேண்டிப் போராடும் போராட்டக் குழுவினர் வெள்ளிக்கிழமை முதல்வர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினர்.
இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி, “உச்சநீதிமன்றம் தெளிவாகச் சொன்ன பிறகு நமக்கு மரியாதையே இல்லாத நிலை உருவாகியுள்ளது. அதிகாரம் இல்லாததால் அரசு ஊழியர்கள் சம்பந்தமாக நிறைவேற்றக்கூடிய திட்டங்களைக் கூட நிறைவேற்ற முடியவில்லை. இதனால் மன உளைச்சல் தான் ஏற்படுகிறது” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “மத்திய நிதித்துறை அமைச்சர் புதுச்சேரிக்கு வந்தபோது புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் எனச் சொன்னார். அதுவும் வழங்கப்படவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு கூறியுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி செய்கின்றனர். இந்தக் கூட்டணி அமைத்ததே மாநில அந்தஸ்து பெறத்தான் என முதல்வர் கூறியிருந்தார். ஆனால், இப்போது அதிகாரிகள் தொல்லை கொடுக்கின்றனர் எனப் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
அதே சமயத்தில், முதல்வரும் நானும் இணைந்து செயல்படுகிறோம் என ஆளுநர் தமிழிசை பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறார். முதல்வரோ அதிகாரிகளைக் குறை கூறுகிறார். கிரண்பேடி எங்கள் ஆட்சிக்குத் தொல்லை கொடுத்த போது வேடிக்கை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தவர்தான் ரங்கசாமி. கிரண்பேடியுடன் தொடர்பு கொண்டு எங்கள் திட்டங்கள் நிறைவேறாமல் தடுத்து நிறுத்தினார். உண்மையிலேயே தமிழிசை சூப்பர் முதலமைச்சராகவும் ரங்கசாமி பொம்மை முதலமைச்சராகவுமே செயல்படுகின்றனர்” எனக் கூறியுள்ளார்.