நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் முன்னாள் அமைச்சர்களான நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ். மணியன், உதயகுமார், வைகைச்செல்வன் என 10 பேர் இடம் பெற்றிருந்தனர். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று (25.01.2024) காலை 11 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களின் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் பெற அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.