கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று (18/03/2021), சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியின் அ.ம.மு.க. வேட்பாளர் நந்தினி தேவி, புவனகிரி சட்டமன்றத் தொகுதியின் அ.ம.மு.க. வேட்பாளர் பாலமுருகன், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியின் அ.ம.மு.க. வேட்பாளர் நாராயணசாமி மற்றும் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியின் அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் உமாநாத் ஆகியோரை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய டிடிவி.தினகரன், "தி.மு.க. யாரையும் நம்பாத ஒரு கட்சி. குஜராத்தில் உள்ள ஐபேக் நிறுவனத்தை மட்டும் நம்புகிறது. 50 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை. அடுத்த ஒரு கட்சி துரோகக் கட்சி, அது எந்த கட்சி என்று உங்களுக்குத் தெரியும். இங்கு வந்த முதல்வர் வானத்திலிருந்து குதித்து போல பேசியிருப்பார். நாம் தொண்டர்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். அவர்கள் பணத்தை நம்பி தேர்தலில் நிற்கிறார்கள். பணமூட்டை தோலில் போட்டுக் கொண்டு தேர்தலில் நிற்கின்றனர். தற்போது எடப்பாடி பழனிசாமிக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது.
வீட்டுத் தலைவிகளை ஏலம் எடுப்பது போல ரூபாய் 1,000, ரூபாய் 1,500 என்று கூறி வருகிறார்கள். அரசு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று கூறும் எடப்பாடி பழனிசாமி, நான்கரை ஆண்டுகளாக ஏன் அரசு வேலை கொடுக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். கமிஷன் ஆட்சி இருக்காது, 69 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டைக் கணக்கெடுத்து யாரும் பாதிக்காத அளவுக்கு சம நீதியுடன் உள்ஒதுக்கீடு வழங்கப்படும். எனவே, எங்களது வேட்பாளர்களை வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.