தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, "நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சி பணபலம் மற்றும் படைபலம் இருந்த போதிலும் அதிமுக, பாஜக கூட்டணி அதிக வாக்குகளைப் பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக 44000 ஓட்டுகள் வாங்கியுள்ளது. வாக்காளர்கள் அதிமுக தலைமைக்கு வாக்களிக்கத் தயார் நிலையில் இருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சியாளர் அமைய வேண்டும். அந்த நிலையிலே தான் நாம் நம்முடைய பணிகளை கூட்டணிக் கட்சிகள் எல்லாம் செய்ய வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அது போன்ற பணிகள் செய்வதற்கு தமிழகத்தில் நிறைய இருக்கிறது. அந்தப் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும்.
அதிமுக, பாஜக பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். இதைத்தான் தமாகா கருதுகிறது. இந்த தேர்தல் மிகவும் அற்புதமான தேர்தல். இதுபோல் பார்க்க முடியாது. வரலாறு காணாத அளவு செலவு செய்துள்ளனர். மக்களை பட்டியில் அடைத்து வைத்து ஆட்சியாளர்கள் தேர்தல் வேலை செய்தனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஆட்சியைக் கலைக்க சதி செய்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். வடமாநிலத் தொழிலாளர்கள் விஷயத்தில் உளவுத்துறை மிகவும் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் ஏன் இப்போது பதற்றம் அடைகின்றனர். வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மகளிர் தினத்தில் மத்திய மாநில அரசுகள் மகளிருக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும். தனிமனித ஒழுக்கம் தேவை. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டும். சூதாட்டத்தைத் தடுக்க புதிய சட்ட திட்டங்கள் கொண்டு வந்து மத்திய மாநில அரசுகள் அதனை தடை செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களைக் காப்பாற்ற முடியும்" என்று கூறினார்.