ஜெ. பிறந்த நாளான 24ஆம் தேதி முதல் சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்பமனுவை அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதனால், 24ஆம் தேதி காலை முதல் அதிமுக சென்னை தலைமை அலுவலகத்தில் ஏராளமானோர் விருப்பமனுவை பெற்று தாக்கல் செய்துவருகின்றனர். மனுக்களைப் பெற்றதும் எம்.ஜி.ஆர், ஜெ. சிலைகளிடம் வைத்து ஆசி பெற்று மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். அதில் ஒரு மனு, அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதிக்கு, ஆலங்குடித் தொகுதியைச் சேர்ந்தவர் கேட்டிருப்பது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இதனால் அமைச்சர் தரப்பும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியின் நெய்வத்தளி கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் நெவளிநாதன். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்புத் தலைவராக இருந்தவர். தற்போது, புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவராக இருக்கிறார். இன்று, ஆலங்குடி தொகுதிக்கு விருப்பமனு படிவத்தை வாங்கியவர் தொடர்ந்து அமைச்சரின் தொகுதியான விராலிமலைக்கும் விருப்பமனு வாங்கியதோடு அதை முகநூலிலும் பதிவிட்டுள்ளார். இந்தச் செய்தி புதுக்கோட்டை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர், தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பலர் விருப்ப மனுத் தாக்கல் செய்து வரும் நிலையில், நெவளிநாதன் அமைச்சரின் விராலிமலைத் தொகுதிக்கு விருப்ப மனு பெற்றிருப்பது அமைச்சரின் ஆதரவாளர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது. இவர்களின் கோபத்திற்கு காரணம், விராலிமலை தொகுதியைப் பொருத்தவரை பல ஆயிரம் கோடிகளுக்கு வளர்ச்சிப் பணிகள் நடக்க காரணமாக இருப்பவர் அமைச்சர். தற்போதுகூட காவிரி-தெற்கு, வெள்ளாறு, வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த முதலமைச்சரை அழைத்துவந்து பிரமாண்டமாக தொடக்கவிழாவும் நடத்தினார். அதேபோல் தன் பெயரில் உள்ள சி.வி.பி. பேரவையின சார்பில் சொந்தச் செலவில் சில கோடிகளில், சுமார் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு ‘விஜயபாஸ்கர் வீட்டுப் பொங்கல் சீர்’ என வழங்கினார். மேலும் விளையாட்டு உபகரணங்கள், தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள், கண் மருத்துவ முகாம்கள் எனத் தொகுதி முழுக்க அரசுப் பணமின்றி தன் சொந்தச் செலவில் வழங்கினார். மேலும் சமீபத்தில் தொகுதி முழுக்க கோலப்போட்டிகளை நடத்தினார். இப்படி தன் தேர்தல் பணியைப் பல மாதங்களுக்கு முன்பே துவங்கிவிட்ட அமைச்சர், இந்த முறை தன்னை எதிர்த்து யாரும் சீட் கேட்க மாட்டார்கள் என நினைத்திருந்தார். ஆரம்ப நாளிலேயே அவரின் தொகுதிக்கு, அடுத்த தொகுதியைச் சார்ந்த ஒருவர் பணம் கட்டியது அமைச்சரின் ஆதரவாளர்கள் சற்றும் எதிர்பாராத ஒன்றாக அமைந்து விட்டது.
இது குறித்து விராலிமலை தொகுதிக்கு விருப்பமனு பெற்றுள்ள வழக்கறிஞர் நெவளிநாதன், “நான் யாருக்கு எதிராகவும் பணம் கட்டவில்லை. அந்த தொகுதியில் நிற்க விரும்பித்தான் விருப்பமனுவை வாங்கியுள்ளேன். நான் வசிக்கும் ஆலங்குடிக்கும் வாங்கியுள்ளேன். கட்சித் தலைமை எந்த தொகுதியில் வாய்ப்பு கொடுத்தாலும் நிச்சயம் வெற்றிபெறுவேன். நான் விராலிமலையை விரும்புவதற்கு காரணம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்ற எந்த தொகுதியிலும் இல்லாத அளவிற்கு அரசின் வளர்ச்சிப் பணிகள் இங்கு நடந்துள்ளது. இந்தத் தொகுதி ஏற்படுத்தப்பட்டதில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தான் கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம் என்றாலும் தேர்தலில் சமூகம் சார்ந்த ஓட்டுகளும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தத் தொகுதியில் நான் சார்ந்த முத்திரையர் சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த மக்களிடம் தங்களுக்கான அரசியல் அங்கிகாரம் கிடைக்கவில்லையே என்கின்ற ஒரு ஏக்கம் இருக்கிறது. மேலும், ஏறத்தாழ 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இயக்கத்தில் ஏற்கனவே 3 தேர்தல்களில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட ஒருவருக்கே 4வது முறையாக வாய்ப்பு கொடுப்பதைவிட புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு வழங்க கட்சித் தலைமை முடிவுசெய்து அந்த வாய்ப்பை எனக்கு வழங்கினால் அமைச்சரின் ஆதரவோடும், அந்த தொகுதியில் இருக்கும் கழக நிர்வாகிகளின் ஒத்துழைப்போடும் வெற்றிபெற்று வெற்றிக்கனியை தலைமையிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார். மேலும், “விருப்ப மனுவை விராலிமலை முருகன் கோயிலில் வைத்துத் தரிசனம் செய்தபிறகு, மார்ச் 3ஆம் தேதி தாக்கல் செய்யப் போகிறேன்” என்றார்.