தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவிக்கும் கருத்துக்களும் அவரின் செயல்களும் பெரும்பாலும் வைரலாகும். இந்நிலையில் நேற்று (23.02.2021) ஆரணியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “இந்தியாவிலேயே எந்த முதல்வரும், ஆய்வு பணிகளுக்காக மாவட்டம்தோறும் செல்கிறாரா? நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே, தமிழத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகிறார்.
எல்லா ஆட்சியிலும் குற்றச்சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். விரோதத்திலும், குரோதத்திலும் குற்றங்கள் நடைபெறும். இதை எந்த ஆட்சியிலும் தடுக்க முடியாது. சர்வாதிகார ஆட்சி நடந்தாலும் சரி, ஹிட்லர் ஆட்சி நடந்தாலும் சரி, ஏதோ ஒரு மூலையில் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும். சசிகலாவை பற்றி பேச தற்போது நேரம் இல்லை, மற்றதைப் பேசுவோம்” எனக் கூறினார்.
முன்னதாக அவர் பேசியபோது, ‘நமது அண்ணன் முதல்வர் ஓ.பி.எஸ்.’ என்று கூறினார். பின்னர் சுதாரித்துக்கொண்டு அண்ணன் முதல்வர் இ.பி.எஸ். என கூறியது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. பொதுவாக சசிகலா தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் நகர்ந்து செல்பவர் செல்லூர் ராஜு. அதேவேளையில் ஓ.பி.எஸ்., சசிகலாவின் ஆதரவாளர் எனும் பேச்சும் அடிபட்டு வருகிறது. இந்த நிலையில், செல்லூர் ராஜு, “அண்ணன் முதல்வர் ஓ.பி.எஸ்.” எனக் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.