பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை குடியரசுத் தலைவராக அமர வைத்தோம் எனப் பெருமை பேசுகிறார்கள். ஆனால் இந்தியா முழுவதும் வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வேங்கைவயல் பிரச்சனையில் பாஜக இதுவரை வாய் திறக்கவில்லை. ஆறுதல் சொல்லக்கூட தயாராக இல்லை. அவர்களது பாஷையில் பாதிப்பிற்குள்ளானவர்கள் இந்துக்கள் தான். ஆனால் அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் தான் சாதியவாதிகள். இதனை எதிர்த்து போராடுபவர்களுக்கு சாதியவாத முத்திரை குத்துவது திரிபுவாத முயற்சி. வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை யாரையும் கைது செய்யாதது அதிர்ச்சி அளிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்துள்ளது.
தமிழக அரசு இதில் உறுதியாக இருந்து உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்க்கட்சிகளாக இருக்கும் யாரும் இதைப் பற்றிப் பேசவில்லை. எந்த நோக்கத்திற்காகவோ தெரியவில்லை. யாருக்கு அச்சப்படுகிறார்களோ தெரியவில்லை. உண்மையிலேயே மனிதாபிமானம் இருக்கிறதா இல்லையா என்று ஐயப்படக் கூடிய வகையில் உள்ளது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை குடியரசுத் தலைவராக அமரவைத்தோம் என பெருமை பேசுகிறார்கள். ஆனால் இந்தியா முழுவதும் வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது.
புதிய குடிநீர்த் தொட்டி கட்டுவதற்கு ஏற்கனவே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். பொதுவான குடிநீர்த் தொட்டியில் இருந்தே மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். மக்களுக்கு தனியே குடிநீர்த் தொட்டியைக் கட்டக்கூடாது என்பதை துவக்கத்தில் இருந்தே விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தி வருகிறது” எனக் கூறினார்.