ஐந்தாவது முறையாகத் தமிழகம் வந்த பிரதமர் மோடி நேற்று (15-03-24) கன்னியாகுமரி பகுதி வந்திருந்தார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக விவேகானந்தர் கல்லூரிக்கு வந்த அவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
தொடர்ந்து மேடையில் பேசிய பிரதமர் மோடி, “பாஜக கன்னியாகுமரியை நேசிக்கிறது. குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நாட்டை பிளவுபடுத்த நினைத்த மக்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர். திமுக - காங்கிரஸ் கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும். தமிழகத்தில் இந்தியா கூட்டணி எடுபடாது. கொள்ளையடிப்பதை கொள்கையாகக் கொண்டது திமுக கூட்டணி. ஆட்சிக்கு வந்து கொள்ளையடிப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது திமுக - காங்கிரஸ் கூட்டணி. திமுக - காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஊழல் நடைபெற்றது. ஹெலிகாப்டர் ஊழல் உள்பட பல்வேறு முறைகேடுகள் திமுக - காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றது. ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி தமிழக மக்கள் காண தடை விதித்த கட்சி திமுக. சனாதனத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது” என்று பேசினார். பிரதமர் மோடி பேசியது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே பொன்னையாற்றின் குறுக்கே ரூ.1294 கோடி மதிப்பீட்டில் 190 மீட்டர் அளவில் புதிதாக தரைப்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. அந்த பாலத்தை திறந்து வைப்பதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (16-03-24) வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார்.
இதனையடுத்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், திமுக மற்றும் காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்ததை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “பிரதமர் என்பவர் எந்த கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், நம்முடைய மதிப்புக்குரியவர். மிகப்பெரிய ஸ்தானத்தில் இருப்பவர். அவர் இப்படிப்பட்ட சிறிய வார்த்தைகளை கூறியிருப்பது அவர் போன்ற பெரியவருக்கு அழகல்ல” என்று கூறினார். இதனையடுத்து அவரிடம், ‘தேர்தல் பத்திரம் விவகாரத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனை நடத்துவதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறாரே’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை” என்று கூறினார்.