
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா அண்ணா அறிவாலயத்தில் இன்று (20.02.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திமுக இந்திய திணிப்புக்குத் தான் எதிரி. இந்திக்கு எதிரி அல்ல. ஆனால் மத்திய அரசு மத்திய அரசு இந்தி, இந்து இந்துத்துவா என்ற அடிப்படையில் இந்திய மொழியைத் திணித்து சமஸ்கிருதத்தைக் கொண்டு வருகிறது. எழுத்து வடிவம் கூட இல்லாத ஒரு மொழிக்குக் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கி தமிழ் மொழியைப் புறக்கணிக்கிற செயலை மத்திய பாஜக அரசு செய்கிறது. இதையெல்லாம் கணித்துத் தான் கலைஞர் ஆட்சிக் காலத்தில் 2006ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்து அனைத்து பள்ளிகளிலும் (அரசு, மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.சி.) தமிழ் கட்டாய பாடம் எனச் சட்டம் கொண்டு வந்தார்.
2006இல் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படை தரவுகள் கூட தெரியாமல் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழ் பாடம் கட்டாயம், ஆங்கில படம் கட்டாயம் இல்லையா? எனக் கேட்கிறார். இந்த சட்டத்தை எதிர்த்து மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்னது 2006இல் கலைஞர் கொண்டு வந்த சட்டம் செல்லும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டின் எல்லா பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டது. இந்த குறைந்தபட்ச அறிவு கூட இல்லாத ஒருவர் பாஜகவின் தமிழக மாநில தலைவராக இருக்கிறாரா? என்பது தான் என்னுடைய கேள்வி.
மத்திய பாஜக அரசின் முழு நோக்கம் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் வர்ணாசிரம ஆட்சி முறையைக் கொடு வருவது தான் மத்திய பாஜக அரசின் நோக்கம் ஆகும். புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைக் கொண்டு வர பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது” என ஆவேசமாகப் பேசினார்.