
அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள், பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்த ட்ரம்ப் தலைமையிலான அரசு அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள மற்ற வெளிநாட்டவர்களை கண்டறிந்து அவர்களை நாடு கடத்து வேலையை செய்து வருகிறது.
அதன்படி கடந்த இரு வாரங்களாக சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறியதாக கூறி 332 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. மூன்று ராணுவ ஹெலிக்பாடர் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டபோது அமெரிக்க ராணுவம் அவர்களை கைதிகள் போன்று கை மற்றும் கால்களின் விலங்கினை மாட்டி இந்தியாவிற்கு நாடு கடத்தியது. இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவியை அதிபர் ட்ரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், “இந்தியத் தேர்தல்களுக்காகவும், வங்காளதேசத்தில் அரசியல் சூழலைச் சீரமைப்பதற்காகவும் அமெரிக்க மக்களின் வரிப்பணம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது. அப்படி இருக்கும் போது, அங்கு வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு ஏன் ரூ.182 கோடி வழங்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும் இந்த தொகை இந்தியாவில் எந்த அமைப்புகளிடம் வழங்கப்பட்டது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், "இப்போது எல்லாம் அமெரிக்க உதவி என்பது பற்றிய செய்திகள் அடிக்கடி வருகிறது. இது 1961-ம் ஆண்டு நவம்பர் 3-ல் ஆரம்பிக்கப்பட்டது. பொதுப்படையாக அமெரிக்க அதிபர் கூறியிருக்கும் கருத்து முட்டாள்தனமானது. இவ்வாறு இருக்கையில் பல ஆண்டுகளாக இந்திய அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க அரசின் உதவிகள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.