
கரூரில் பாஜக சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக மாநிலத் தலைவர், “கெட் அவுட் மோடி என்று சொல்ல முடியுமா?” எனத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விட்டிருந்தார். இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (20.02.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “அது அவரின் தரம். அதைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் பிரச்சனையை மடை மாற்ற முயற்சிக்கிறார்.
தமிழக அரசு கேட்கிற நிதியை வாங்கி தரத் துப்பில்லை. சவால் விடுவதற்கெல்லாம்.... மோடி 2018 ஆண்டும் தமிழகம் வரும் போது கோ பேக் மோடி என்று சொல்லிவிட்டோம். அப்போது அவர் திருட்டுத்தனமாக வந்துவிட்டு சுவரையெல்லாம் இடித்து விட்டு சென்றார். மக்களை எல்லாம் சந்திக்க வாய்ப்பில்லாமல் பயந்துகொண்டு சென்றார். அவர் எங்குச் சென்றாலும் கறுப்புக்கொடி, பலூன் எல்லாம் காட்டினார்கள். அதனால் பிரச்சனை திசை திருப்ப வேண்டாம். போஸ்டர் ஒட்டுவது எல்லாமா? ஒரு சாதனையா?. வரச் சொல்லுங்கள். அறிவாலயத்தை ஏதோ செய்வேன் என்று சொன்னார். தைரியம் இருந்தால் அவரை அண்ணாசாலை பக்கம் வரச் சொல்லுங்கள். மத்திய அரசிடம் அனுமதி பெற்று சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். தனியார்ப் பள்ளிகளில் இலவச உணவு தருகிறார்கள் தனியார்ப் பள்ளிகளில் சீருடைகள் இலவசமாகத் தருகிறார்களா” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில், “மத்திய அரசிடம் இருந்து நிலுவைத் தொகையைப் பெற திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் உடன் பேசி முடிவெடுப்போம்.கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து முடிவு எடுக்கப்படும். திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தலைமையிலான கூட்டம் இன்று கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இது பற்றி விவாதிக்கப்படும்” எனப் பேசினார். முன்னதாக பாஜக சார்பில் சென்னையில் மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 12ஆம் தேதி (12.02.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர், “நான் பாஜக தலைவராகத் தொடர முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால், நான் இங்கிருந்து செல்லும்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன்” எனப் பேசியிருந்தார்.