
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் அக்கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து, பரந்தூரில் புதியதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்களை அண்மையில் சந்தித்திருந்தார். அதே சமயம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் கடந்த 2ஆம் தேதி (02.02.2025) 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இந்த தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் விஜய் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதனையடுத்து, த.வெ.க.வின் கொள்கை தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்தார். அதன் பின்னர், கொள்கை தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு மடிக்கணினி, பெண்களுக்குத் தையல் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்கினார். இந்நிலையில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவுத் தினம் இன்று (20.02.2025) அனுசரிக்கப்படுகிறது. சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் அஞ்சலையம்மாள் சிலைக்கு அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளின் நினைவு தினத்தையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளோடு, அவர்களின் பாதுகாப்பையும் மீட்டெடுக்க உறுதி ஏற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்