கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எல்.இ.டி. விளக்கு திட்டத்தில் முறைகேடு செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர் கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்து கோவையைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், தாமோதரன், கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் எஸ்.பி.வேலுமணியின் வீடு முன்பு குவிந்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றம்சாட்டி வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து முழக்கமிட்ட அ.தி.மு.க.வினரை அங்கிருந்து வெளியேறும் படி காவல்துறையினர் அறிவுறுத்தினர். ஆனால் அங்கிருந்து யாரும் கலைந்து செல்லாததால், ஏழு எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேலுமணி, ''ஆதாரம் இல்லாமல் மூன்றாவது முறையாக வந்து எதுவும் எடுக்காமல் சென்றுள்ளனர். என் வீட்டில் 7,100 ரூபாய் பணம், என் அம்மா ரூமில் சின்ன சின்ன வெள்ளி, கம்மல் இதுமாதிரி சில பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். ஊடகங்களுக்கு மட்டுமல்ல நீதிமன்றம், நீதியரசர்களுக்கே நெருக்கடி ஏற்பட்டுள்ளது. என்னுடைய வழக்கு எப்பொழுதெல்லாம் வருதோ அதற்கு முந்தைய நாளே திமுக நீதியரசர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அழுத்தத்தை கொடுப்பார்கள். என் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய் வழக்கு என்று போய்க்கொண்டிருக்கும் சூழலில் என் மேல் மீண்டும் ஒரு வழக்கை போடுகிறார்கள். எடப்பாடி அதிமுகவின் பொதுச்செயலராக வர இருக்கிற நிலையில் எங்களை பழிவாங்க முதல்வர் தொடர்ந்து இதை செய்து வருகிறார். முதல்வராக பொறுப்பேற்றதற்கு பின் திட்டங்களை நிறைவேற்றுவதில் அவர் கவனம் கொள்ளவில்லை. மின்வெட்டு உயர்வு அதனை திசை திருப்ப இப்பொழுது இதை கொண்டுவருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு எடப்பாடி கோவை, திருப்பூர் வந்திருந்தார். அவருக்கு மக்கள் வரவேற்பு அதிகம் இருந்தது. இந்த எழுச்சியை பொறுக்க முடியாமல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.