
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று நேர்முகத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் 60 பேருக்கு ஆளுநர் மாளிகையில் ஆலோசனை வழங்கப்பட்டது.
மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய ஆளுநர், “இந்தி கற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. எந்த மொழியையும் கற்பது தவறில்லை. அது மக்களுடன் இணைந்து பணியாற்ற உதவும். இந்தியாவில் அதிகளவு மக்கள் இந்தி பேசுகின்றனர். அதனால் இந்தி கற்றுக்கொள்வது பயன்படும்.
நேர்முகத்தேர்விற்கு தயாராகுபவர்கள் திடமாக இருக்க வேண்டும். நீங்கள் மக்களுக்காக பணியாற்ற உள்ளீர்கள். எத்தகைய சிக்கல்கள் வந்தாலும் அதை சிரித்த முகத்துடன் எதிர்கொள்ள வேண்டும். கேள்விகளுக்கு நிதானமாகப் பதிலளியுங்கள். தெரியவில்லை என்றால் தெரியவில்லை எனச் சொல்லவேண்டும்.
மத்திய அரசின் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள். போராட்டக்காரர்கள் தேவைப்படவில்லை. நீங்கள் மனித உரிமை ஆர்வலராக இருக்கலாம். சுற்றுச்சூழல் ஆர்வலராக இருக்கலாம். சுதந்திரம் கேட்டுப் போராட்டம் நடத்தலாம். ஆனால், அதிகாரிகள் அதிகாரிகளாகவே இருக்க வேண்டும். ஆர்வலராக இருக்கக்கூடாது. நிர்வாகரீதியாக மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை” எனக் கூறினார்.