திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுகவில் அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மார்ச் 23-ம் தேதி காலை 11 மணியளவில் திருப்பத்தூர் நகரம், சாலை, ஜோலார்பேட்டை போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
வேன் மூலமாக நடைபெற்ற பிரச்சாரத்தில் கூடியிருந்த கூட்டத்தின் முன்பு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி எந்த வித கொள்கையும் இல்லாத கூட்டணி, இந்த கூட்டணியை மக்கள் புறப்பணிப்பார்கள். தமிழகத்தில் எனது ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து இல்லை, ரவுடிஸம் இல்லை, சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது. சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதன் மூலமாக தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதனால் தான் மாநிலம் வளர்ச்சி பெறுகிறது. தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. கடந்த காலத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் இருந்த மின்வெட்டை இப்போது எனது தலைமையிலான ஆட்சி இல்லாமல் செய்துள்ளது என்றார்.
முதல்வராக இருப்பவரின் தேர்தல் பிரச்சாரத்துக்கு மிக சொற்ப அளவிலேயே கட்சியினர் வருவதால் நொந்துப்போய் உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்பது அவரது முகத்தை பார்க்கும்போது தெரிகிறது.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான பிரச்சாரத்தை முடித்துவிட்டு வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். அதோடு, இடைத்தேர்தல் நடைபெறும் குடியாத்தம் ( தனி ), ஆம்பூர் தொகுதியிலும் பிரச்சாரம் செய்யும் பழனிச்சாமி, இன்று இரவு வேலூரில் தங்கிவிட்டு நாளை அரக்கோணம் தொகுதியிலும், இடைத்தேர்தல் நடைபெறும் சோளிங்கர் தொகுதியிலும் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது.