Skip to main content

“திமுக என்றால் 2 கொம்பு முளைத்தவர்களா?” - இ.பி.எஸ். கேள்வி!

Published on 05/02/2025 | Edited on 05/02/2025
Is DMK two horned EPS Question

திமுக என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா? என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.  இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா?.

‘போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்’ என்று கள்ளச்சாராயம் விற்பவன் தைரியமாக சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும். போதாக்குறைக்கு, ‘திமுக கட்சிக்காரன்’ எனும் அடையாளம் வேறு. திமுக என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா?. அவர்கள் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா?. தமிழ்நாட்டில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் திமுகவினர் செய்வதற்குதானா முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே?.

உடனடியாக இந்த கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதோடு, எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை உறுதிசெய்யவேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்