நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஒரு அறிக்கையை வெளியிட்டார். யாரும் எதிர்பாரா விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டு அறிக்கை வந்திருந்தது.
2009 தேர்தலில் வெற்றி பெற்று கடலூர் மக்களவை தொகுதி்யின் உறுப்பினராக இருந்தவர் கே.எஸ்.அழகிரி. அதற்கு முன்பு 1991ல் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ல் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் இவர். இந்த அறிவிப்போடு இன்னொரு புதிய அறிவிப்பும் வந்தது. அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்களாக எச்.வசந்த்குமார், கே.ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் நியமிக்கப்பட்டார்கள்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார், வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர். இந்திய அளவில் இரண்டு பெரிய கட்சிகளும் ஒன்றை ஒன்று கடுமையாக எதிர்க்கும் கட்சிகள் காங்கிரஸ் - பாஜக. தமிழகத்தில் பாஜகவின் தலைவராக இருப்பவர் தமிழிசை சௌந்தர்ராஜன். இவரது தந்தை குமரி அனந்தன், தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர். வசந்தகுமார், குமரி அனந்தனின் சகோதரர் என்ற முறையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் உறவினர். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் உறவினர்கள் எதிரெதிர் முகாம்களில் முக்கிய பொறுப்புகளில் இருப்பது புதிதல்ல. என்றாலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ள வசந்தகுமாரிடம், "நீங்கள் கடுமையாக எதிர்க்க வேண்டிய பாஜகவில் தமிழக தலைவராக இருப்பவர் உங்கள் உறவினர். அவர் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கடுமையான பேட்டியோ, அறிக்கையோ வெளியிட்டால் எப்படி எதிர்கொள்வீர்கள்?" என்று கேட்டோம். அதற்கு அவர் உறுதியாக, "அதையும் தாண்டி, அதற்கு மேலேயும் அறிக்கை வெளியிடுவோம். யார் எந்த இடத்தில் இருந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் பிறப்பால் காங்கிரஸ்காரர்கள். எங்களுக்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கியம். சொந்தமெல்லாம் சம்மந்தமில்லை" என்றார்.