நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. வேலூர் தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் களப்பணியில் இருந்தும் தேர்தலில் தோல்வி அடைந்தது ஆளும் தரப்புக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக 38 இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்றது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற திமுக இப்போது இருந்தே களப்பணியில் தீவிரமாக உள்ளனர். அதிமுக தரப்பில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நடக்கும் உட்கட்சி பூசலால் அதிமுக தொண்டர்கள் பலரும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் அதிமுகவை வலுப்படுத்த சசிகலாவுடன் எடப்பாடி இணையலாம் என்ற தகவலும் அரசியல் விமர்சகர்களால் சொல்லப்படுகிறது. மேலும் சசிகலாவை அதிமுகவில் இணைத்தால் தென் தமிழக வாக்குகளை கவர முடியும் என்று எடப்பாடி தரப்பு நினைப்பதாக கூறுகின்றனர். பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா வெளிவந்தவுடன் அவரிடம் சமரசம் முயற்சியில் ஈடுபட எடப்பாடி தரப்பு தயாராக இருப்பதாகவும், அதற்கான வேலையை எடப்பாடிக்கு நெருங்கிய அதிமுக நிர்வாகிகள் பார்த்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.
சசிகலா தரப்பும் அதிமுகவிற்கு வர தயாராக உள்ளதாக தெரிவிக்கின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அதிமுகவோடு சசிகலா இணைந்து செயல்பட்டால் அதை வரவேற்பன் என்று புகழேந்தி கூறியிருந்தார் என்பது குறிப்படத்தக்கது. எனவே வரும் பொதுத் தேர்தலில் எப்படியாவது மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அதிமுக குறிக்கோளாக இருப்பதாக தெரிகிறது. அதே போல் சசிகலா எடப்பாடியுடன் சேர்ந்தால் தினகரனை ஒதுக்கி வைக்கவும் சசிகலா தரப்பு ரெடியாக இருப்பதாக கூறுகின்றனர்.