சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” எனப் பேசியிருந்தார்.
இது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்தக் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தங்களது கருத்துகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “சென்னை இலக்கியத் திருவிழா - 2023’ சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த இவ்விழா மூன்று நாட்கள் நடைபெற்று இன்றுடன் முடிவடைகிறது.
இன்று இவ்விழாவில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இம்மாதிரியான நிகழ்வை ஒருங்கிணைப்பதே நல்ல விஷயமாகப் பார்க்கின்றேன். இலக்கியம் மற்றும் கலைகள் சார்ந்த ஆளுமைகளுடன் இளைஞர்கள் உரையாடுவது மிக நல்ல விஷயம். இது சமூகத்தில் மிக முக்கியமான நிகழ்வு. தமிழ்நாடா தமிழகமா எனக் கேட்கின்றனர். தமிழ்நாடு தான்” எனக் கூறினர்.