
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் ரூ.418 கோடியில் 6,760 முடிவற்ற அரசு பணிகளை இன்று (18-04-25) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.390 கோடியில் 7,369 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.357 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுமார் 2 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கினார். முன்னதாக, சாலை மார்க்கமாக நடந்து வந்த முதல்வர் ஸ்டாலின், அங்கு கூடியிருந்த பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்ததால் நிகழ்ச்சிக்கு வர தாமதாகிவிட்டது. அதற்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞர் நவீன தமிழ்நாட்டின் சிற்பி. இதற்கு அடையாளமாக விளங்கக்கூடியது தான் திருவள்ளூர் மாவட்டமும், அதன் சுற்றுப் பகுதிகளும். கார் உற்பத்தி தொழிற்சாலை தொடங்கி கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை வரை அனைத்தும் கலைஞர் காலத்தில் தொடங்கியது தான். கடந்த 4 ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் இந்த திருவள்ளூர் மாவட்டத்திற்கு எவ்வளவோ செய்திருக்கிறோம். அனைத்து திட்டங்களும் திருவள்ளூருக்கே கொடுத்துவிட்டோமோ என்று கூட எனக்கு தோன்றியது. ஏற்கெனவே அதிமுகவின் பத்து ஆண்டுகால இருண்ட ஆட்சியில் முடங்கி கிடந்த உள்கட்டமைப்பு பணிகளை கடந்த 4 ஆண்டுகளில் நடந்து கொண்டிருக்கிறது.
நமது அரசினுடைய அக்கறையான நிர்வாகத்தினால் அனைத்து துறைகளும் இன்றைக்கு வளர்ந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் வளர்கிறார்கள். அதனால் தான் தமிழ்நாடு அனைத்து வகையிலும் வளர்ச்சி அடைகிறது, தமிழ்நாடு அரசின் கொண்டு வரும் திட்டங்களால் மாபெரும் சமூக புரட்சி நடைபெற்று வருகிறது. நமது ஆட்சியில் தன்னம்பிக்கையும் வளர்ந்திருக்கிறது, தமிழ்நாடும் வளர்ந்திருக்கிறது. இதை தான் சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆட்சி மீது நியாயமாக எந்த குறையும் கூறமுடியாமல் அவதூறு பரப்பி கொண்டிருக்கிறார்கள். சட்ட ஒழுங்கு, அரசு நிர்வாகம் என எல்லாவற்றிலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சில எதிர்க்கட்சிகள், பொறுப்பான எதிர்க்கட்சியாக நடந்துகொள்ளாமல் தமிழ்நாட்டிற்கு எதிரி கட்சிகள் மாதிரி செயல்படுகிறார்கள்.
தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைக்கக்கூடிய கூட்டத்தோடு உறவாடி, தமிழ்நாட்டை அடகு வைக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய எண்ணம். இது தான் அந்த சந்தர்ப்பவாதிகளுடைய ஒரே எண்ணமாக இருக்கிறது. நீட் தேர்வை எதிர்ப்பதாக இருந்தாலும், மும்மொழி கொள்கையை நிராகரிப்பதாக இருந்தாலும், வக்ஃப் சட்டத்தை எதிர்ப்பதாக இருந்தாலும், தொகுதி மறுசீரமைப்பால் பாதிப்படையக் கூடிய மாநிலங்களை ஒன்று திரட்டுவதாக இருந்தாலும், நாம் தான் இந்திய அளவில் வலுவாக ஊன்றி குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். மாநில உரிமையுடைய அகிய இந்திய முகமாக திமுக தான் இருக்கிறது. சமீபத்தில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாம் கேட்பதற்குப் பதில் சொல்லாமல் திசைதிருப்புவதற்காக இதையெல்லாம் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார். மாநில உரிமையைக் கேட்பது தவறா?. இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து தான் தமிழ்நாடு போராடுகிறது. நீங்கள் செய்யாததால், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றோம். திமுகவின் பவர் என்ன என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் இப்போது தெரிந்திருக்கிறது. இது தான் திமுகவின் பவர்.

திசை காட்டும் எங்களை பார்த்து திசைதிருப்பிகள் என்று கூறி புலம்ப வேண்டாம். நீட் தேர்வில் விலக்கு தருவோம் என்று அமித்ஷாவால் சொல்ல முடியுமா?. இந்தியை திணிக்க மாட்டோம் என உங்களால் உறுதியளிக்க முடியுமா?. தமிழ்நாட்டுக்கு இவ்வளவு நிதி கொடுத்திருக்கிறோம் என்று பட்டியல் போட முடியுமா?. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டினுடைய பிரதிநிதித்துவம் குறையாது என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா?. நாங்கள் திசைதிருப்புவதாக இருந்தால், இதற்கெல்லாம் தெளிவான பதிலை ஏன் தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுக்கவில்லை. எவ்வளவு கொடுத்தாலும் இங்கு அழுகுகிறார்கள் என ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி பேசினார். நான் மிகுந்த அடக்கத்தோடு, மரியாதையோடு பிரதமர் மோடிக்கு நினைவுபடுத்துகிறேன். ஒன்றிய அரசிடம் கையேந்தி பிச்சை கேட்க மாநில அரசு என்ன பிச்சைக்காரர்களா? என்று குஜராத் முதல்வராக இருந்த போது மோடி கேட்டார். ஆளுநர்கள் மூலம் தனி ராஜாங்கம் செய்கிறார்கள் என்றும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக மோடி முதல்வராக இருந்த போது புகார் சொன்னார்.
இப்போது நாங்கள் கேட்டால் மட்டும் அழுகை என சொல்வதில் என்ன நியாயம்? நான் கேட்பது அழுகை அல்ல, அது தமிழ்நாட்டினுடைய உரிமை. நான் அழுது புலம்புவனும் இல்லை, ஊண்டு போய் யார் காலில் விழுபவனும், இல்லை. உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று கலைஞர் நமக்கு கற்று கொடுத்தார். அவருடைய வழியில் பயணிப்பவன் நான். அதற்கு அடையாளமாக, இந்தியாவில் எந்த அரசும் செய்யாத நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் நாங்கள் அமைத்திருக்கிற மாநில சுயாட்சி குழு. ஆகஸ்ட் 15ஆம் சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தான் தேசியக் கொடியேற்ற வேண்டும் என்ற உரிமையை அனைத்து மாநில முதல்வர்களுக்கு கலைஞர் பெற்று கொடுத்தாரோ, அது மாதிரி இந்த குழுவின் மூலமாக அனைத்து மாநிலங்களில் நியாயமான உரிமைகளையும் நாங்கள் பெற்றுத்தருவோம். தன் குழந்தைகளுக்கு என்ன தேவை என்று தாய்க்கு தான் தெரியும். தன் குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று எங்கோ டெல்லியில் இருப்பவர்கள் தீர்மானித்தால் அந்த தாய் பொங்கி எழுவாள்.
ஒன்றிய அரசு இத்தனை இடற்பாடுகளை உருவாக்கும் போதே, நாங்கள் இவ்வளவு சிறப்பாக செயல்படுகிறோம் என்றால், எங்களை வஞ்சிக்காமல் நியாயமாக கொடுக்க வேண்டிய நிதியை கொடுத்தால் எங்களால் இன்னும் பலமடங்கு சிறப்பாக செயல்பட முடியும். நீங்கள் செய்யவில்லை என்றால், நீங்கள் ஏற்படுத்துகின்ற தடைகளை எல்லாம் சட்டப்பூர்வமாக உடைத்தெறிவோம். அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டை எல்லா துறைகளிலும் நம்பர் 1 மாநிலமாக மாற்றுவதற்கு நாங்கள் உழைத்துக் கொண்டே தான் இருப்போம். 2026இல் தமிழ்நாட்டில் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார். டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது. அப்படி ஒரு தனி குணம், தனித்துவம் கொண்டவர்கள் நாங்கள். மற்ற மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள கட்சியை உடைத்து ஆட்சி அமைக்கிற உங்கள் ஃபார்முலா தமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது. 2026யிலும் திராவிட மாடல் ஆட்சி தான். எங்கள் தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான். உங்கள் பரிவாரங்களையும் சேர்த்து கொண்டு வாருங்கள், ஒரு கை பார்ப்போம். தன்மானமும், தமிழ் இனமானமும் இல்லாத கொத்தடிமைகளான துரோக கூட்டணியில் சேர்ந்து தமிழ்நாட்டை ஆள நினைக்கிறீர்கள். நாங்கள் உங்களுடைய உருட்டல் மிரட்டல் அடிப்பணியும் அடிமைகள் அல்ல. அமித்ஷா இல்ல, எந்த ஷாவாக இருந்தாலும் எங்களை ஆள முடியாது. நான் இருக்கும் வரை உங்கள் திட்டம் பலிக்காது” என்று ஆவேசமாகப் பேசினார்.