
பணம், மது மற்றும் பரிசு பொருட்கள் வாங்கிக்கொண்டு வாக்களிப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் மிருகங்களாகத் தான் பிறப்பார்கள் என்று பாஜக எம்.எல்.ஏ. சாபம் விட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தை பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வரும் நிலையில் மோவ் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக பாஜகவை சேர்ந்த உஷா தாகூர் இருந்து வருகிறார். இவர் மாநிலத்தின் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். அவ்வப்போது சில கருத்துகளை கூறி லைம்லட்டில் வந்து செல்லும் இவர், பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் மிருகமாகத்தான் பிறப்பார்கள் என்று கூறியிருப்பது பேசு பொருளாக மாறியிருக்கிறது.
மோவ் தொகுதிக்கு உட்பட்ட ஹசல்புர் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய எம்.எல்.ஏ. உஷா தாகூர், “பாஜக ஆட்சியின் கீழ் பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டம் மூலம் தலா ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இருந்தும் ரூ.500 , 1000-க்காக தங்களின் வாக்குகளை விற்பது அவமானமான செயலாகும். கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். யார் யார் பணம், மது மற்றும் பரிசு பொருட்களை வாங்கிக்கொண்டு வாக்களிக்கிறீர்களோ அவர்கள் அடுத்த ஜென்மத்தில் நாய் பூனை, ஒட்டகம், ஆடாகத்தான் பிறப்பீர்கள். நான் கடவுளுடன் நேரடியாக பேசுவேன். என்னை நம்புங்கள்” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், பாஜக எம்.எல்.ஏவின் பேச்சு பிற்போக்குத் தனமானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள உஷா தாகூர், கிராமப்புற வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே அவ்வாறு பேசினேன் என்று கூறியவர், பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களுக்காக ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமையான வாக்கினை விற்பது மன்னிக்க முடியாத குற்றம். நமது செயல்கள் தவறாக இருந்தால், நிச்சயம் நாம் மனிதர்களாக பிறக்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.