அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, பிப்ரவரி 9ஆம் தேதி முதல் இராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் ஐந்தாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். பிப்ரவரி 10ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். வாணியம்பாடி தொகுதியில் அதிமுகவின் இளைஞர், இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் இஸ்லாமியா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில், எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பேசினார். அப்போது அவர், “தேர்தல் கமிஷன் விரைவில் தேர்தல் என்கிற போரை அறிவிக்கவுள்ளது. அந்தப் போரில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் ஆகியோரின் பணி மிக முக்கியமானது. அந்தப் போரில் நீங்கள், உங்களை ஈடுபடுத்திக்கொண்டு எதிரிகளை விரட்டியடித்து வெற்றிக்கொடி நாட்ட வேண்டும்.
அதிமுக அரசு, கல்விக்கு ஏராளமான சலுகைகள் வழங்கி வருகிறது. தமிழகத்தில் அதிகளவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரி, மருத்துவக் கல்லூரி போன்ற பல கல்லூரிகள் இயங்கி வருவதால் உயர் கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் உயர் கல்வி படிப்பத்தில் இந்தியாவில் தமிழகம் முதல் மாநிலமாக பெயர் பெற்றுள்ளது. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.
இந்த மாதம் இறுதிக்குள் தமிழக முழுவதும் அதிமுக அரசு அறிவித்த 2 ஆயிரம் மினி கிளினிக்களில் மருத்துவர்கள், மருத்துவ செவிலியர்கள், உதவியாளர்கள் நியமனம் செய்து உரிய சிகிச்சை அளிக்கும் திட்டத்தை நடைமுறைபடுத்தப்படும். இந்தியாவில் சிறப்பான சாலை வசதிகள் கொண்ட மாநிலமாகவும், சாலை விபத்துக்கள் குறைக்கப்பட்ட மாநிலமாகவும், சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கக்கூடிய மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. அதிமுக அரசு, துறை வாரியாக கவனம் செலுத்தி, தேசிய அளவில் பல துறைகளில் விருதுபெற்ற மாநிலமாக உள்ளது. கடந்த காலங்களில் மருத்துவப் படிப்பில் 3,060 இடங்களில் குறைந்த இடங்கள் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்குக் கிடைத்து வந்தது. ஆனால், அதிமுக அரசு கொண்டு வந்துள்ள 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டால், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயன்ற 435 மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைத்துள்ளது. இதனால் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள கட்சி வேட்பாளர்களுக்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று பேசினார்.