
கிருஷ்ணகிரியில் பொது இடத்தில் இருந்த திமுக கொடிக் கம்பத்தை அகற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் ஜாதி ரீதியிலான அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அண்மையில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கட்சி நிர்வாகிகளுக்கு கடிதம் வாயிலாக கொடுத்திருந்த அறிவுறுத்தலில்,'அடுத்த 15 நாட்களுக்குள் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பொது இடங்களில் உள்ள திமுக கொடிக்கம்பங்களை அகற்றி, அதற்கான விவரத்தை தலைமைக்கு அறிவிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.
அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொது இடங்களில் உள்ள திமுக கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மூன்றம்பட்டி பகுதியில் திமுக கிளைச் செயலாளரான ராமமூர்த்தி என்பவர் கேத்த நாயக்கன்பட்டி பொது இடத்தில் உள்ள திமுக கொடிக் கம்பத்தை அகற்ற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்கம்பியில் கொடிக்கம்பம் மோதி மின்சாரம் பயந்தது. இதில் கிளைச் செயலாளர் ராமமூர்த்தி உட்பட ஐந்து பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ராமமூர்த்தி சிகிச்சை பலனின்றி இறந்து விட்ட நிலையில் இதில் காயமடைந்த பெருமாள், ஆறுமுகம், பூபாலன், சக்கரை ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். பொது இடத்தில் இருந்த திமுக கொடிக் கம்பத்தை அகற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.