
அதிகாலை நேரம் ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு வந்த ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டது நெல்லை மாநகரை உறைய வைத்திருக்கிறது. நெல்லை டவுண் பகுதியிலிருக்கும் ஜாமிய தைக்கா பள்ளி வாசலில் அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு வந்தவர்களில் ஒருவரை மட்டும் வேவு பார்த்துக் காத்திருந்த மர்ம கும்பல் ஒன்று அவரைச் சுற்றி வளைத்து அரிவாட்களால் தலைப் பகுதியைக் குறிவைத்து வெட்டியிருக்கிறது. ரத்தம் கொப்பளிக்க தலைப்பகுதி முழுவதுமாய் சிதைக்கப்பட்டு அலறிச் சாய்ந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார். கும்பல் தப்பியோடியிருக்கிறது.
ரத்தச் சகதியால் விடிந்த நெல்லை டவுணின் அந்தப் பகுதி சம்பவத்தால் பதறியிருக்கிறது. தகவல் போய் ஸ்பாட்டுக்கு வந்த நெல்லை மாநகர போலீஸ் கமிசனர் சந்தோஷ் ஹாதிமணி, மேற்கு மண்டல துணை போலீஸ் கமிசனர் கீதா, உதவி கமிசனர் அஜித்குமார் உள்ளிட்ட போலீசார் அந்தப் பகுதியினை ஆய்வு செய்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள். விசாரணையில், கொலையானவர் நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் பிஜிலி என்பவர். ஓய்வு பெற்ற எஸ்.ஐ. என்பதோடு தி.மு.க.வின் தலைவர் கலைஞரின் கோபாலபுரம் வீட்டிலும் பாதுகாப்பு பணியிலிருந்தவர். விருப்ப ஓய்வு பெற்றவர். மகனும் மகளும் திருமணமாகி செட்டிலானவர்கள் என்பதால் மனைவி அஜீனீஸ் நிஷாவுடன் நெல்லை டவுண் பகுதியிலிருந்து வருபவர்.
தற்போது ரம்ஜான் நோன்பிலிருக்கும் ஜாகீர் உசேன் மார்ச் 18 அதிகாலை ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அருகேயுள்ள ஜாமியா தைக்கா பள்ளி வாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது வழியிலுள்ள காஜா பீடி அலுவலகமருகே வேவு பார்த்துக் காத்திருந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து வெட்டிப் பொலி போட்டு விட்டுத் தப்பியோடியிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர்களது விசாரணையில், நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்த முஸ்லிமாக மதம் மாறி திருமணம் செய்து கொண்டு தவுபீக் என்று பெயர் மாற்றிக் கொண்ட கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும், ஜாகீர் உசேன் பிஜிலிக்கும் 36 சென்ட் அளவு பள்ளி வாசலுக்கு சொந்தமான (வக்பு இடம்) இடம் தொடர்பான பிரச்சினை காரணமாக முன் விரோதமிருந்துள்ளது.
இது தொடர்பான வழக்கில் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் ஜாகீர் உசேன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், வக்பு சொத்து தொடர்பான முழு பின்னணி விபரங்களையும் ஜாகீர் உசேன் சேகரித்து வந்தது தவுபீக் என்ற கிருஷ்ணமூர்த்திக்கு ஆத்திரத்தைக் கிளப்பியுள்ளதாம். இந்தச் சூழலில் தான் ஜாகீர் உசேன் பிஜிலி மர்ம கும்பலால் வழி மறித்துக் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் போலீசாரின் விசாரணைகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. எனினும் இந்தப் பதட்டக் கொலை காரணமாகப் பரவலான விசாரணையில்.. கிடைத்த தகவல்களும், பின்னணியும் பீதியைக் கிளப்புகின்றன.இந்தக் கொலைச் சம்பவத்தில் குறிப்பாக கூலிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகக் கனமான பேச்சுக்கள் ஓடுகின்றன.

நெல்லை டவுணின் அந்தப் பள்ளிவாசலுக்கு சொந்தமாக அந்தப் பகுதியைச் சுற்றிலும் பரம்பரையாக ஏராளமான நிலங்களிருக்கின்றனவாம். மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பிருந்தே இருக்கிற அந்த ஏராளமான நிலங்களின் அப்போதைய மதிப்பு மிகவும் சொற்பமாம். அப்போதைய காலங்களில் ஜாகீர் உசேனின் தந்தை அந்தப் பள்ளிவாசலின் பரம்பரை முத்த வல்லியாக இருந்தவர். அப்போதைய காலங்களில் இஸ்லாமிய மக்கள் உட்பட சிலர் புரிதலடிப்படையில் பள்ளிவாசலின் அந்த இடங்களில் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். அப்போதைய பள்ளிவாசல் நிர்வாகமும் இதனைக் கண்டு கொள்ளவில்லையாம். அதோடு நிர்வாகம் பள்ளிவாசலுக்குரிய அனைத்து நிலங்களையும் ஒருங்கிணைக்கிற காரியங்களை மேற்கொ்ளளாததால் அவைகள் கேள்வி கேட்பாரின்றியே இருந்திருக்கின்றன. மேலும் அந்த நிலங்களை பிறருக்கு விற்கவோ விலை சாட்டவோ முடியாதாம்.
தற்போது பள்ளிவாசலின் பரம்பரை முத்தவல்லியாக ஜாகீர் உசேன் பிஜிலி பொறுப்பிலிருந்து வருகிறார். தற்போதைய காலச் சூழலில் பள்ளிவாசலுக்குரிய அந்த இடங்கள் ஏரியாவின் முக்கியப் பகுதியிலிருப்பதால் வழி காட்டுதல் மதிப்புபடி அந்த நிலங்களின் மதிப்பு பல கோடிகள் வரை உயர்ந்திருக்கின்றனவாம். பள்ளி வாசலின் பரம்பரை முத்தவல்லியாக ஜாகீர் உசேன் பிஜிலி பொறுப்பிலிருப்பதால் பரந்து கிடக்கிற பள்ளி வாசலின் அந்த நிலங்களை வக்பு இடமாக ஒருங்கிணைக்கிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அது தொடர்பான ஆவணங்களைத் திரட்டிக் கொண்டு நடவடிக்கைக்காக நீதிமன்றம் வரை போயிருக்கிறார் ஜாகீர் உசேன் பிஜிலி.

இதனிடையே வக்புவிற்குரிய அந்த இடங்களில் குறிப்பாக 36 சென்ட் கொண்ட இடத்தில் இஸ்லாமிய சமூகம் சார்ந்த ஒருவரும் வீடுகட்டிக் குடியிருந்து வருகிறாராம். அந்தக் குடும்பத்தில் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்த கிருஷ்ணமூர்த்தி பின் இஸ்லாமியராக மதம் மாறி தன் பெயரை தவுபீக் என்று மாற்றிகொண்டதாகவும் பரவலான பேச்சு. சூழல்கள் இப்படியிருக்க 2023ன் போது அந்த நிலங்கள் பள்ளிவாசலுக்குச் சொந்தமானவை என்று நீதிமன்றத் தீர்ப்பு வர, ஜாகீர் உசேன் பிஜிலி அதனடிப்படையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அந்த நிலங்களை மீட்கவும் அதிலுள்ள வீடுகளைக் காலி செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தவர், குறிப்பாக அந்த 36 சென்ட் நிலத்தின் ஒரு பகுதியில் குடியிருப்பவரின் வீட்டையும் காலி செய்ய நிர்ப்பந்தித்திருக்கிறராம். இது விவகாரமாக இந்த இடத்தில் தான் தவுபீக் (மதம் மாறிய கிருஷ்ணமூர்த்தி) உள்ளே நுழைந்திருக்கிறாராம். இதனால் ஜாகீர் உசேன் பிஜிலிக்கும் தவுபீக்கிற்குமிடையே பகை மூன்டு தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்தே தவுபீக் மீது, இது தொடர்பாக டவுண் காவல் நிலையத்திற்கு வாட்ஸ் அப்பில் புகார் அனுப்பிய ஜாகீர் உசேன் பிஜிலி பின் 9.12.24 அன்று டவுண் காவல் நிலைய ஆய்வாளர் கோபால கிருஷ்ணனிடம் நேரில் புகார் கொடுத்திருக்கிறாராம். அதே சமயம் தவுபீக்கும் தன்னுடைய பெயர் கிருஷ்ணமூர்த்தி என்று கூறி சிவில் விவகாரத்தில் கிரிமினல் புகார் கொடுக்க பின்னர் ஜாகீர் உசேன் பிஜிலி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் போடப்பட்டுள்ளதாம். ஆரம்ப கட்டமுதல் இந்தப் புகார்கள் காவல் நிலைய அதிகாரிகள், ஆய்வாளரால் சரிவர விசாரிக்கப்படவில்லை என புகார்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட, நில ஆக்கிரமிப்பு விவகாரம் வீரியமாக முன்னாள் எஸ்.ஐ. ஜாகீர் உசேன் பிஜிலிக்கு ஒரு கும்பலால் கொலை மிரட்டல் வர, பீதியாகிப் போன அவர் தப்பிப்பதற்காக தலைமறைவாகியிருக்கிறார். இந்த நிலையில்தான் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு ஜாமியா தைக்கா பள்ளிவாசலில் அதிகாலை தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பிய ஜாகீர் உசேன் பிஜிலியை மர்மக் கும்பல் வெட்டிச் சாய்த்திருக்கிறது.

இக்கொலைச் சம்பவத்திற்கு டவுண் போலீசார் முறையான நடவடிக்கை மேற்கொள்ளாததே காரணம். அவர்கள் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் சம்பவமே நடந்திருக்காது. இனிமேலும் இவர்கள் விசாரணை நடத்தினால் அது முறையாக இருக்காது. எனவே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என வலியுறுத்தி ஜாகீர் உசேன் பிஜிலியின் உறவினர்கள் டவுண் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பாகியிருக்கிறது. இதனிடையே கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் பிஜிலி, தான் கொல்லப்படுவதற்கு முன்பு சமூக வலை தளத்தில் வெளியிட்ட வீடியே வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், என்னை ஒரு கூட்டுக் கும்பலே கொலை மிரட்டல் மிரட்டுகிறது. அதில் முக்கியமான நபர் 9 வருடத்திற்கு முன்பு இஸ்லாத்திற்கு மாறிவந்த தவுபீக் என்பவர். அவர் நோக்கம் பணம் சம்பாதிப்பதே, என் புகார் மனுக்கள் காவல் நிலையத்தில் சரிவர விசாரிக்கப்படவில்லை. மிரட்டலுக்குக் காரணம் அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள். சாகப் போகிற நான் என்ன வேண்டுமானாலும் பேசலாம். எப்படியும் என்னைக் கொன்று விடுவார்கள் என்று எனக்குத் தெரியும். 36 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். போலி பத்திரங்கள் போட்டது மற்றும் கொலை மிரட்டல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆய்வாளர் அதிகாரிகள் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று வைரலாகிற வீடியோவில் சில விஷயங்களையும் பேசியிருக்கிறார்.
சம்பவம் குறித்து டவுண் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு கேட்டதில் நான் சென்னையிலிருக்கிறேன். முக்கியமான பணியிலிருக்கிறேன். பிறகு பேசுகிறேன் என பதட்டத்துடன் தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். மேலும் டிபார்ட்மெண்ட் அவர்மீது நடவடிக்கை எடுக்கிற முடிவிலிருக்கிறதாம். இதனிடையே இந்தக் கொலைச் சம்பவம் காரணமாக கார்த்திக், அக்பர்ஷா ஆகிய இருவர் நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 3ல் சரணடைந்திருக்கிறார்கள். தென்மாவட்டங்களில் அரிவாட்கள் மோதலின் அடிப்படையே அதிகாரம், நிலம், பகை, காதல், சாதியாகத்தானிருக்கிறது.