ஏப்ரல், மேயில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் வந்து விட்டால் என்ன செய்வது என்று எடப்பாடி கவலைப்படுவதாக சொல்லப்படுகிறது.
இது பற்றி விசாரித்த போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், தற்போது இருக்கும் நிலவரத்தை ஆராய்ந்து, விரைவில் சென்னை உள்ளிட்ட பகுதிகளைத் தண்ணீர்ப் பஞ்சம் தாக்கும் என்று முதல்வர் எடப்பாடியிடம் அறிக்கை கொடுத்துள்ளார்கள். உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் இப்படியொரு சிக்கல் வந்தால், அது ரிசல்ட்டில் எதிரொலிக்கும் என்று கவலைப்பட்ட அவர், அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்துள்ளதாக கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து ஆந்திர அரசிடம், கிருஷ்ணா நீரைக் கேட்கும் முடிவு எடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையைக் கடிதமாக எழுதி, அதை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் கொடுக்கும்படி அமைச்சர்கள் ஜெயக்குமாரையும், எஸ்.பி.வேலுமணியையும் அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் ஆந்திராவுக்கு சென்று 4-ந் தேதி ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து, அந்தக் கடிதத்தைக் கொடுத்துள்ளார்கள்.
கடிதத்தைப் படித்து பார்த்த ஜெகன்மோகன், அதிகாரிகளுடன் கலந்து பேசிவிட்டு, எந்த அளவுக்கு தமிழகத்துக்கு உதவ முடியுமோ, அதை செய்கிறேன் என்று சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. கூடவே, எனக்கும் உங்க முதல்வரை சந்தித்து பேச வேண்டியுள்ளது. அதனால் விரைவில் சென்னை வருகிறேன் என்று அவர் சொல்லியனுப்பியிருப்பதாக கூறுகின்றனர். கோட்டை வட்டாரம் ஜெகன் மோகன் ரெட்டியின் வருகையை எதிர்பார்த்துள்ளதாக சொல்கின்றனர்.