
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நீர்வளத்துறை மீதான விவாதம் நடைபெற இருக்கின்ற நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு நடவடிக்கை கூட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் உரையாற்றினார். அவரது உரையில், ''தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் ஜனநாயக உரிமை; அரசியல் பிரதிநிதித்துவ உரிமை; பாதிக்கப்பட்ட மக்கள் நல் வாழ்வு திட்டங்கள் செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு தண்டிக்கப்படக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டி முன்கூட்டியே எச்சரிக்கை மணி அடித்து இந்தியாவிலேயே முதன்முதலாக நம்முடைய தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14/02/2024 அன்று ஒரு மனதாக தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.
அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளின் கூட்டத்தைக் கடந்த 05/03/2025 அன்று கூட்டினோம். அக்கூட்டத்தில் இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பின் பிரதிநிதித்துவத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய நாடாளுமன்ற மறுசீரமைப்பை எதிர்த்தும், தற்போது இருக்கும் தொகுதி வரையறை 2026 லிருந்து மேலும் 30 ஆண்டுகள் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்; அரசமைப்புச் சட்டத்தில் அதற்கான சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்; நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் திட்டத்தை மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தியும், தெளிவுபடுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நமது நியாயமான கோரிக்கைகளையும் எடுத்துச் செல்ல ஒன்றிய அரசுக்கு மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி தெரியப்படுத்த கூட்டு நடவடிக்கை குழு ஏற்படுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதற்கான முன்னெடுப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்தோம். அதன்படி 22/03/2025 அன்று கூட்டுக்குழு கூட்டத்தின் முதல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் பிரதமரை கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் சந்தித்து கடிதம் அளித்து முறையிடுவததாகவும், கூட்டாட்சி தத்துவ உரிமை அரசியல்; பிரதிநிதித்துவ உரிமை ஆகியவற்றை பாதுகாப்பது என வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது என்பதை இந்த மாவட்டத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்''என்றார்.