
இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் போது, மத்திய அரசின் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம், பகுதிநேர பணியாளர்களுக்கு அடையாள அட்டை, இல்லங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் திட்டம் நீட்டிப்பு, 5 ஆண்டுகளில் 5 லட்சம் பெண் தொழில் முனைவோரை உருவாக்க புதிய திட்டம் என்ற பல அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கென தனி அறிவிப்பும் எதுவும் வெளியிடவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் நேற்று மத்திய நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நாங்கள் இவ்வளவு பணம் கொடுக்கிறோம், நீங்கள் என்ன கொடுக்கிறீர்கள் என்ற வாதமே தவறு. அவர்கள் எடுக்கிற கணக்கு எங்கிருந்து வருகிறது என்பதே எனக்கு புரியவில்லை. இன்னும் ஏளனமாக சொல்ல வேண்டுமென்றால், கோயம்புத்தூரும், சென்னையும் தான் நாட்டுக்கு வரி கொடுக்கிறது. நாங்கள் தான் கொடுக்கிறோம் எங்களுக்கு தான் திருப்பி கொடுக்க வேண்டும், மற்ற ஊர்கள் எப்படி போனால் எங்களுக்கு என்ன என்று இந்த இரண்டு ஊரும் கேட்பார்கள். ஆனால், பாரத நாட்டில் அந்த மாதிரியான திட்டங்கள் இல்லை. நமது தமிழ்நாட்டில் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு இப்படியாக திசைதிருப்பப்படுகிறது” என்று தெரிவித்திருந்தார்.
நிர்மலா சீதாராமன் பேசிய அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு திமுக எம்.பியும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை நிர்மலா சீதாராமன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா? தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் @nsitharaman அவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது… pic.twitter.com/ZC8wHu3Cvd— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 22, 2025