நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. நாளை (16.03.2024) தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் அ.தி.மு.க.வுடன் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து தனது கட்சியான இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் நிர்வாகிகளுடன் இணைந்து நேற்று முன்தினம் (13.03.2024) பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இந்நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று (15.03.2024) சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணதாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் சார்பில் கூட்டணி குறித்தான முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் கா.கண்ணதாசனுக்கு அளிக்கப்படுகிறது. பொதுச்செயலாளர் தலைமையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி தேர்தல் பரப்புரை குழுவானது கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.