
தேனி அருகே பழனி செட்டிப்பட்டியில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்றாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சி தொடங்கியது. இதில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு புத்தகக் கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அதன் பின் சில ஸ்டால்களுக்கு சென்று புத்தகங்களை பார்த்து படித்தும் ரசித்தார்.
அதன்பின்னர் நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் ஐ.பெரிய சாமி பேசியதாவது, “தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்விக்காக ரூ.47 ஆயிரம் கோடி ஒதுக்கிய ஒரே முதலமைச்சர் மு.க ஸ்டாலின்தான்” என்று கூறினார். இந்த புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி 30 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. சுமார் 60க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு குழந்தைகள், பெரியவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் வரலாறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் இந்த புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. மேலும், இந்த புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.