
மதுரையில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு சில நபர்கள் கொள்ளை அடிக்கும் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இரவு நேரங்களில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு சில மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தது. அந்த பகுதியில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சி ஆதாரங்களை அடிப்படியாக வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். குரங்கு குல்லா அணிந்து கொண்டு அரை நிர்வாணமாக ட்ரவுசர் மட்டும் அணிந்து கொண்டு நோட்டமிடும் அந்த நபர்கள் வீடு ஒன்றின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயலும் அந்த காட்சிகள் வெளியாகி இருந்தது.

நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்த நிலையில் போலீஸ் நடத்திய தீவிர விசாரணை அடிப்படையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிவா, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மருதுபாண்டி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் திருடியதை ஒப்புக் கொண்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருவரும் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.