![Stalin's lies will not be taken in the age of science](http://image.nakkheeran.in/cdn/farfuture/DQqu7sgg4-Ulmguu2FmIub1kt55YOTO2z_IOnXqnM9I/1616146177/sites/default/files/inline-images/eps-2.jpg)
புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “இந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அருண்மொழிதேவன் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர். தொகுதியிலுள்ள மக்கள் பிரச்சினையை விரைவில் தீர்க்க கூடியவர்.
அதிமுக அரசைப் பற்றி தொடர்ந்து பொய் பேசுவதையே ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார். இது மக்களைக் குழப்பும் நாடகமாகும். அதிமுக தலைமையிலான கூட்டணி, வெற்றிக் கூட்டணி. விஞ்ஞான முறையில் தற்போது செய்திகள் மின்னல் வேகத்தில் அடுத்த நொடியே உலகம் முழுக்க செல்கிறது, இப்படி இருக்கும் விஞ்ஞான காலத்தில் ஸ்டாலின் சொல்லும் பொய் எடுபடாது.
ஒரு முதல்வரை எப்படி பேச வேண்டும் என்பது கூட ஒரு கட்சித் தலைவருக்குத் தெரியவில்லை. ஒரே நேரத்தில் 2000 மினி கிளினிக்; மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பு; வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும்; இந்திய அளவில் தமிழகத்தில் அதிமுக அரசு முன்மாதிரி திட்டங்களை அறிவித்து முன்மாதிரி அரசாக செயல்படுகிறது” என்று அருண்மொழி தேவனுக்கு வாக்கு கேட்டு பேசினார். அதேபோல் நேற்று (18.03.2021) இரவு சிதம்பரம் காந்தி சிலை அருகே பாண்டியன் எம்எல்ஏவுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.