புகழ்பெற்ற டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் கன்னையாகுமார். இவர்மீது கடந்த 2016ஆம் ஆண்டு தேசத்துரோக வழக்கு போடப்பட்டு, அதுதொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ஜே.என்.யூ.வில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரலெழுப்பியதாக இவர்மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதற்கிடையில் பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான மெகா கூட்டணியில், கன்னையாகுமார் தனது சொந்த தொகுதியான பெகுசாராயில் போட்டியிடுவார் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், தேசத்துரோக வழக்கு தொடர்பான விசாரணையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் சொல்லப்பட்டன.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் சார்பில், கன்னையாகுமார் பெகுசாராய் தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளது. அதேபோல், உஜிராபூர் தொகுதியில் சி.பி.ஐ.எம்.எல்.ஐச் சேர்ந்த ராம்தேவ் வர்மா மற்றும் இன்னொரு தொகுதிக்கான வேட்பாளர் கூடிய விரைவில் அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாகத் பந்தன் எனப்படும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்பாக, சி.பி.ஐ.யைச் சேர்ந்த நிர்வாகிகள் ராஞ்சி சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ்வைச் சந்திக்க இருப்பதாகவும், அப்போது மாநிலத்தின் அரசியல் சூழல் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கன்னையாகுமார் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பது வாக்குவங்கியில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என பேசப்பட்ட நிலையில், அதனை மறுக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.