நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில், வக்பு சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி அனைத்துக் கட்சிக் கூட்டம் வரும் நவம்பர் 24ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதான குழு அறையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் சார்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப தயாராகி வருகின்றனர். இதனையொட்டி அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசு கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (22.11.2024) மாலை திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று (22.11.2024 - வெள்ளிக்கிழமை) மாலை 7.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். எனவே இந்த கூட்டத்தில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நவம்பர் 25 அன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.