ஆளுநரை அவமரியாதை செய்வதுதான் திராவிட மாடலா? என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் குஷ்பு பேசுகையில், “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தினமும் நாம் நாளிதழ்களில் படித்துக்கொண்டு தான் இருக்கிறோம். தினமும் எங்கெல்லாம் பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கின்றன என்று நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.” என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ஈஷாவில் பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாகக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த குஷ்பு, “விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. எந்த வகையில் அரசாங்கம் துரிதமாக விசாரணையைக் கொண்டு போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு பெண் உயிரிழந்திருக்கிறார். அதற்கு நல்லபடியாக விசாரணை நடக்க வேண்டும். எல்லாருக்கும் ஒரே சட்டம் தான். எனக்கு ஒரு சட்டம்; உங்களுக்கு ஒரு சட்டம்; ஈசாவில் ஒரு பிரச்சனை நடந்தால் அதற்கு வேறு சட்டம் என்பது கிடையாது. சட்டம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். சட்டரீதியாக எப்படி விசாரணை நடத்த வேண்டுமோ அப்படித்தான் நடத்த வேண்டும்.” என்றார்.
மேலும் அவர், “மாநிலத்தைப் பாதுகாப்பதற்காகத் தான் ஆளுநர் இருக்கிறார். அதைத் தாண்டி நாங்கள் பேசுவோம்; நாங்கள் சொல்லிக் கொடுத்தது; எழுதி வைத்ததைத்தான் ஆளுநர் படிக்க வேண்டும் என்பது தவறானது. சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறும் போது அமைச்சர் பொன்முடியின் செயலை நாம் பார்த்தோம். ஆளுநருக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை இதுதானா? இதைத்தான் திராவிட மாடல் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களா?
இதற்கு முன்பு அமைச்சர் பொன்முடி இலவசமாக பெண்களுக்கு கொடுத்த பஸ் பயணத்தை 'உங்களுக்கு நாங்கள் ஓசியில் கொடுக்கவில்லையா' என்று கேட்டார். அப்பொழுது தமிழக முதல்வர் ஏதும் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டார். இப்பொழுது ஆளுநர் வெளியே செல்லும் பொழுது 'போயா...' எனக் கையைக் காட்டிக்கொண்டே இருந்தார். இதுதான் அவர்களுடைய திராவிட மாடலா? மற்றவர்களை இழிவாகப் பேசுவது; அவமரியாதை செய்வதுதான் திராவிட மாடலா என்று நான் கேட்கிறேன்.'' என்றார்.