அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேர்தல் ஆணையம் 10 நாட்கள் கால அவகாசம் கோரி இருந்தது. டெல்லி உயர்நீதிமன்றம் நிர்ணயித்திருந்த காலக்கெடு இன்றோடு நிறைவு பெறுவதால் நேற்று (19/04/2023) இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ள நிலையில், இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஓபிஎஸ் தரப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் தேர்தல் ஆணையத்தின் முடிவிலும் எங்களுக்கு பின்னடைவு இல்லை. எல்லாரும் மேலெழுந்த வாரியாக பிரச்சனைகளுக்கு முடிவெடுக்கிறார்களே தவிர கட்சி விதிகளின் படி எப்படி செயல்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுவதில் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இங்கே கிடைக்கவில்லை என்றால் மக்களிடத்தில் தொண்டர்களிடத்தில் செல்வோம்.
அடுத்தகட்ட நடவடிக்கை என்பது திருச்சி மாநாட்டில் தெரியும். டிடிவி தினகரன் ஏற்கனவே கட்சி நடத்துகிறார். அவரை அழைத்தால் தோழமைக் கட்சிகளை எல்லாம் அழைக்க வேண்டும். எனவே அவரை அழைக்கவில்லை. சசிகலாவை பொறுத்தவரை அவர் இன்னமும் நம்புகிறார், எல்லாரையும் ஒன்று சேர்க்கலாம் எனக் கூறுகிறார். அவரை எங்கள் மாநாட்டிற்கு வாருங்கள் என அழைத்தால் அது அவரது நடுவு நிலைமைக்கு குந்தகமாகும். நாங்கள் அழைத்து அவர் வரவில்லை என்றால் எங்கள் வேண்டுகோளை அவர் நிராகரித்ததாக ஆகும். ஆகவே அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். மேலும் கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு இல்லையென்றால், வட இந்திய தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேரின் ஆதரவு இல்லை என்றால் டெபாசிட் போயிருக்கும். தோல்வியே அவருக்கு தொடர்கதை” எனக் கூறினார்.