
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இங்கிலாந்திற்குச் சென்று நேற்று இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் லாமியை சந்தித்து கலந்துரையாடினார். இங்கிலாந்தின் சத்தம் ஹவுஸில் நடந்த இந்த கலந்துரையாடலின் போது, அரசியல், வர்த்தக பேச்சுவார்த்தைகள், கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கலந்துரையாடலின் போது, சத்தம் ஹவுஸ் வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் காலிஸ்தான் கொடியுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கலந்துரையாடலை முடித்துவிட்டு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சத்தம் ஹவுஸ்ஸை விட்டு வெளியேறினார். அப்போது காலிஸ்தான் ஆதரவாளர் நபர் ஒருவர், ஜெய்சங்கர் காரை நோக்கி ஓடி, போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் இந்திய தேசியக் கொடியைக் கிழித்து ஜெய்சங்கருக்கு எதிராக குரல் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் வருகையின் போது நடந்த நிகழ்வுகள் ஏற்றுக்கொள்ள முடியாது என இங்கிலாந்து கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இங்கிலாந்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ‘இங்கிலாந்து வந்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், சத்தம் ஹவுஸ் விட்டு வெளியேறும் நடந்த நிகழ்வுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். அமைதியான போராட்டத்திற்கான உரிமையை இங்கிலாந்து நிலைநிறுத்தினாலும், பொது நிகழ்வுகளை மிரட்டுதல், அச்சுறுத்துதல் அல்லது சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதிகள் தங்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்று பல வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இதில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வாழும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் காலிஸ்தானுக்கான கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இதில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் தலைமையில் காலிஸ்தான் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவால் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது படுகொலைக்கு, இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்க, அதற்கு இந்தியா மறுத்து கடும் கண்டனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.