தன்னுடைய அதிகாரம், மகனுக்கு மந்திரி பதவி என பா.ஜ.க. விடம் விசுவாசம் காட்டும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். திடீரென நிலையை மாற்றிப் பேசியது, அமைச்சர்கள் சிலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமித்ஷாவை தனியே சந்தித்த எடப்பாடி, ஓ.பி.எஸ். சம்பந்தப் பட்ட தொடர் வருமானம் வரும் அத்தனை பைல்களையும் ஒப்படைத்து விட்டு "என்னுடைய வருமானத்தில் கமிஷன் தொகை சரியாக கொடுத்து விடுகிறேன். இதில்லாமல் கட்சிக்கான செலவுகள் அனைத்தையும் நானே செய்கிறேன். ஆனால் ஓ.பி.எஸ். இவ்வளவு வருமானம் இருந்தும் கட்சிக்கு எந்தச் செலவும் செய்யாமல் உங்களுக்கும் நன்றி செலுத்தாமல் ஏமாற்றுகிறார்'' என குற்றஞ்சாட்டி புகார் பட்டியல் வாசித்திருக்கிறார். இதன் பிறகு எடப்பாடி பி.ஜே.பி.யுடன் மிக நெருக்கமான ஆளாக மாறியதால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதை உணர்ந்த அவர், ஓ.பி.எஸ். உடன் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்.
"நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் (ஓ.பி.எஸ்.) உட்பட அமைச்சர்கள் யாரும் செலவு செய்யவில்லை. அமைச்சர்கள் செலவு செய்யாத அத்தனை தொகுதிகளிலும் தோற்று விட்டோம். இதுகுறித்து நான் விசாரணை நடத்த வேண்டும். இதனடிப்படையில் அமைச்சர்களை பதவியிலிருந்து எடுக்க வேண்டும்'' என்று ஓ.பி.எஸ்.ஸிடம் இ.பி.எஸ். சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க.வில் இதுவரை தொழிற்சங்கத் தலைவர் என்கிற பதவி அமைச்சர் இல்லாமல் கட்சியில் சீனியரான ஒருவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும்; ஆனால் முதல்முறையாக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொடுத்திருப்பது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கரூர் மாவட்டத்தில் செந்தில்பாலாஜியை மீறி ஜெயித்ததற்காக இந்தப் பதவியாம்.
நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி, அடுத்து சட்டமன்றத் தேர்தல் என அனைத்திற்கும் கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் அ.தி.மு.க.வில் தேர்தல் செலவுக்கு தேவைப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டை 6 மண்டலமாக பிரிக்க நினைக்கிறது அ.தி.மு.க. நிர்வாகம். எடப்பாடி, பன்னீர், வேலு மணி, விஜயபாஸ்கர், வைத்திலிங்கம், தங்கமணி ஆகியோருக்கு ஏறத்தாழ 40 தொகுதிகள் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. இதில் யார், அதிகபட்சமான இடங்களை ஜெயிக்கிறார்களோ அவர்களில் முதல் இரண்டு பேருக்கு 2 துணை முதலமைச்சர் பதவி, அடுத்த இரண்டு பேருக்கு வளமான, முக்கியமான துறைகளை உள்ளடக்கிய அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று கூட்டு சமரசம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது பி.ஜே.பி.யை எதிர்த்து தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க. கட்சிக்குள் முக்கிய தலைவர்கள் எடுத்துள்ள வியூகம் என்கிறார்கள்.
ஓ.பன்னீரோ "எடப்பாடி தொடர்ந்து என்னை அவமானப்படுத்தி வருகிறார்' என்று அவைத் தலைவர் மதுசூதனன், செங்கோட்டையன், மாஃபா பாண்டியராஜன், ஏ.சி. சண்முகம் ஆகியோருடன் ஒருங்கிணைந்து தனி அணி என கொடி பிடிக்கலாம் என்கிறார்கள். மீண்டும் இரட்டை இலையை முடக்கி தேர்தல் நேரத்தில் ரஜினி, ஓ.பி.எஸ். அணி, தி.மு.க. எதிர்ப்புக் கட்சிகள், பா.ம.க. என புதிய கூட்டணி உருவாகலாம். அ.தி.மு.க. வில் எந்த அணி, எந்த வியூகமாக இருந்தாலும் அது டெல்லி பா.ஜ.க.வின் ரிமோட் கண்ட்ரோலில்தான் இயங்கும் என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.
-ஜா.தாவீதுராஜ்.