நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதற்கட்ட பிரச்சாரத்தை நேற்று காலை தொடங்கினார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வேட்புமனுதாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி கடந்த 4ஆம் தேதி வரை நடைபெற்றது. சனிக்கிழமை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர். இன்று (7ஆம் தேதி) வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும். வருகிற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையடுத்து கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சி மாநகராட்சி 16வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து அரியமங்கலத்தில் தி.மு.க. ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, தி.மு.க. வேட்பாளர் மிதிவாணனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இதில் வட்ட திமுக செயலாளர்கள் தங்கவேலு சண்முகம் கார்த்தி ராமலிங்கம் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.