Skip to main content

எதிர்க்கட்சியாக வைத்த கோரிக்கை; முதல்வராக பொறுப்பேற்று செயல்படுத்திய மு.க.ஸ்டாலின்; எ.வ. வேலு பெருமிதம்

Published on 13/03/2023 | Edited on 14/03/2023

 

Claim made by opposition party; M.K.Stalin who took responsibility as the Chief Minister; E.V. Velu is proud

 

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை அப்போது ஆட்சியிலிருந்த எடப்பாடி பழனிசாமி ஏற்காததால் திமுக ஆட்சிக்கு வந்த உடன் முதலமைச்சரின் கையெழுத்து அந்த திட்டத்திற்கு இருந்தது என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

 

வேலூரில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மார்ச் 12 ஆம் தேதி இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, “திமுக ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகும் தொடர்ந்து தமிழகத்தில் மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதலமைச்சராக இருந்துள்ளனர். அவர்கள் யாராவது திராவிடம் என்று உச்சரித்து இருக்கிறார்களா? ஒரு நாளும் உச்சரித்ததில்லை. திராவிடம் என்று சொல்வதால் நாம் தலை நிமிர்ந்து நிற்கிறோம். திராவிடம் என்று சொன்னால் தமிழரின் அடையாளம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அவர்கள் திராவிடத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் போல இருந்தனர். அதனால் தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபோது திராவிட மாடல் ஆட்சி என்று கூறினார்.

 

அண்ணா முதலமைச்சராக இருந்தபோது இந்த ஆட்சியை பெரியாருக்கு காணிக்கையாக கூறுகிறேன் என்று கூறினார். அண்ணாவுக்கு பின்னால் கலைஞர் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தார். அப்போது கலைஞர் இது அண்ணாவின் ஆட்சி என்று கூறினார். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் எண்ணிய ஆட்சி தான் தற்போது திராவிட மாடல் ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சோவியத் நாட்டு தலைவராக இருந்த ஸ்டாலின் மொழிப்பற்று, நாட்டுப்பற்று இருந்தால் தான் நல்ல நாடு என்று குறிப்பிட்டார். நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் பொருளாதாரம் பண்பாடு இருக்க வேண்டும் என்று கூறினார். மு.க. ஸ்டாலின் அதைத்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.

 

தமிழ்நாட்டில் மொழி உணர்வு இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெற வேண்டும் என்று எண்ணுகிறார். நாடு பண்பட்ட சமுதாயமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். அந்த அடிப்படையில் தான் இன்று ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்கிறது. அதில் தமிழ்நாடு தான் தொழிலாளர், மாணவர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி பெறும் மாநிலமாக, சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கின்ற ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மாநிலம் என்று இந்தியா டுடே பத்திரிகை எழுதியுள்ளது. ஒவ்வொரு மாநிலமாக சென்று இந்த ஆய்வு செய்து, தமிழ்நாடு முதல் மாநிலம், நம்பர் ஒன் முதலமைச்சர் ஸ்டாலின் என்று குறிப்பிட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. 75 ஆம் ஆண்டிற்கு சென்னையில் நினைவுச் சின்னம், கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு மருத்துவமனை என பல திட்டங்களை மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

 

அதிமுக 5 ஆண்டுகால ஆட்சியில் செவிடாக இருந்தது. வேலூர் தலைநகரில் உள்ள மருத்துவமனை 150 கோடி ரூபாயில் புனரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒப்பந்தக்காரர்கள் மட்டும் ஒத்துழைப்பு அளித்தால் அந்தக் கட்டிடமும் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டிடமாக அமையும். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா உலகத்தையே ஆட்டி படைத்தது, கொரோனாவில் பல்லாயிரம் பேர் இறந்தார்கள். அந்த நேரத்தில் சட்டமன்றம் ஒரு நாள் கூடியது. ஸ்டாலின் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அப்போது ஸ்டாலின் சட்டசபையில், மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே 5000 ரூபாய் ஒரு வீட்டிற்கு வழங்க வேண்டும் என கேட்டார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணம் இல்லை கஜானா காலி என்று கூறினார். ஆனாலும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்தோம். ஆனாலும் அதிமுக ஆட்சியில் அதை செய்யவில்லை. அப்போது ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூபாய் 4000 ஒவ்வொரு வீட்டிற்கு வழங்கப்படும் அதுதான் என்னுடைய முதல் கையெழுத்து என்று கூறினார். அதைப்போலவே ஸ்டாலின் முதலமைச்சராக வந்து செய்தார்.

 

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து திட்டங்களை எல்லாம் நிறுத்தி விட்டார்கள் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். எல்லாம் திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் தான். அதிமுக ஆட்சியை கொண்டு வந்த தாலிக்கு தங்கம் என்ற ஒரு திட்டம் புதிய திட்டமே இல்லை. அது ஏற்கனவே திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் தான். இவர்கள் பெயரை மாற்றி திட்டத்தை அறிவித்தார்கள். அதை நாங்கள் பாராட்டுகிறோம். எடப்பாடி பழனிசாமி தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டோம் என்று கூறினார். அந்த திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக தாலியும் தரவில்லை தங்கமும் தரவில்லை. மூன்று லட்சத்து 40 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் இருந்தன. பல்வேறு முறைகேடுகள் குளறுபடிகள் இருப்பதால் 42 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதால் அந்த திட்டத்தை மாற்றி, புதுமைப் பெண் என்ற திட்டத்தின் மூலம் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

 

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூன்று பேர் தான் பெண்கள் படிக்க வேண்டும் என்று அதிக அக்கறை எடுத்துக் கொண்டனர். மதிய உணவு திட்டம் நூறாண்டு காலத்திற்கு முன் துவக்கப்பட்ட திட்டம். இந்த திட்டம் இடையில் நிறுத்தப்பட்டது. பின்னர் காமராஜர் முதலமைச்சராக வந்தபோது மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தார். அதன் பின்பு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அந்த திட்டத்தை விரிவுபடுத்தினார். அந்த திட்டத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது வாரத்திற்கு ஐந்து முட்டை என்ற திட்டத்தை கொண்டு வந்தார்.

 

இன்று பல பிள்ளைகள் காலையிலே உணவு உட்கொள்ளாமல் பள்ளிக்கு செல்வதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு தாயாக இருந்து காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். தேர்தல் அறிக்கையில் தெரிவித்த 80 சதவீத திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். சட்டசபையில் நத்தம் விஸ்வநாதன் எழுந்து ஆயிரம் ரூபாய் அறிவித்தீர்களே எப்போது வழங்குவீர்கள் என்று கூறினார். அதிமுக போகிற பொழுது ஆறு லட்சத்து 28 ஆயிரம் கோடி கடன் வைத்து விட்டு சென்றார்கள். ஓட்டு போட்ட மக்கள் கேள்வி கேட்டால் நாங்கள் பதில் சொல்வோம். நீங்கள் கேட்பதற்கு என்ன தகுதி உள்ளது. இதோ தமிழக முதலமைச்சர் சொன்னதை தான் செய்வார் செய்வது தான் சொல்வார் என்று சட்டசபையில் நான் கூறினேன். வரும் நிதிநிலை அறிக்கையில்  ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதையும் செய்வார் சொல்லாததையும் செய்வார்” என்று வேலு கூறினார். இந்த நிகழ்ச்சியின்போது அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் அஸ்மிதா திமுகவில் இணைந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்