Published on 06/07/2019 | Edited on 06/07/2019
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஜூன் 28ஆம் தேதியில் இருந்து சட்டமன்ற கூட்ட தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்ட தொடரில் துறை ரீதியான கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள், பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலும், விளக்கமும் அளித்து வருகின்றனர். விவாதத்தின்போது, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்.

இந்த நிலையில் மதுரையில் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் செல்லூர் ராஜு, செய்தியாளர்களின் சந்திப்பின் போது, முதல்வர் எடப்பாடியை,பாண்டிய மன்னனை போல் மதுரையை பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். ஜெயலிதாவை மறந்து தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடியை சமீப காலமாக அதிமுக அமைச்சர்கள் அதிகமாக புகழ்ந்து வருவது சாதாரண அடிமட்ட தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஆட்சி முடிந்த உடன் இவர்கள் அப்போது கட்சியில் யாருக்கு செல்வாக்கு இருக்கோ அவங்களை புகழ்வார்கள் என்று ஆதங்கத்துடன் அதிமுக தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.