அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த 17ம் தேதி அறிவிக்கப்பட்டு, 18ம் தேதி இ.பி.எஸ். மனுத்தாக்கல் செய்தார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனச் சொல்லப்பட்டது. இந்நிலையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சார்பில் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் அனைத்து தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ் பாபு, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மீண்டும் ஒத்தி வைத்தார். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனும் அடிப்படையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக இ.பி.எஸ். தேர்வாகிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், “தனிநீதிபதியின் தீர்ப்பு இறுதியானது அல்ல. தீர்ப்பு வரட்டும் பேசிக்கொள்ளலாம். நீதிமன்றத் தீர்ப்பு எங்களுக்கு தொடர்ந்து பின்னடைவாக அமைகிறது என சொல்கிறார்கள். எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. இன்று வந்தது தான் எங்களுக்கு பின்னடைவு போலத் தெரியும். அப்பீல் செய்துள்ளோம். பின் பார்த்துக்கொள்ளலாம். நீதிமன்றத்தையும் மக்கள் மன்றத்தையும் சந்திக்க உள்ளோம். நாங்கள் உண்மையான அதிமுக என நிரூபிப்போம்” எனக் கூறினார்.
இந்த சூழலிலும் சசிகலா மற்றும் டிடிவியை சந்திக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வைத்திலிங்கம், “எங்கள் வழக்கு நடந்து கொண்டுள்ளது. இனி அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதிமுகவை வலுப்படுத்த வேண்டியதுதான் எங்கள் கருத்து” எனக் கூறினார்.