டிசம்பர் 13ஆம் தேதி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசனுக்கு திறந்தவெளிப் பொதுமேடைக்கு கரோனா தடுப்பு விதிகள் காரணமாக அனுமதி கொடுக்கப்படவில்லை. அதனால் தனது பிரச்சாரத்தை மாவட்டங்களிலுள்ள மண்டபங்களில் வைத்துக் கொண்டார் கமல்.
டிசம்பர் 15 அன்று காலையில் சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்களைச் சந்தித்துக் ஆலோசனை மேற்கொண்ட கமலை வரவேற்ற தூத்துக்குடியின் மக்கள் நீதி மய்யத்தின் வடக்கு மா.செவும் தீப்பெட்டி ஆலை அதிபருமான கோவில்பட்டியின் கதிரவன், மண்டபம் உள்ளிட்ட கூட்டம் திரட்டுவதற்கான ஏக செலவுகளையும் பார்த்துக் கொண்டார்.
கோவில்பட்டி தனியார் மண்டபத்தில், கூட்டம் மிகச் சரியாக மதியம் 12.10 மணி என்று சொல்லப்பட்ட நிலையில் இரண்டு மணிநேரம் கமல் தாமதமாக வர, இருந்த கூட்டத்தில் சிலர் சலிப்பில் கலைந்துவிட்டனர்.
வந்த வேகத்தில் மைக்கைப் பிடித்துவிட்டார் கமல். அரை மணிநேரமே நடந்த தொழில்முனைவோர் கூட்டத்தில் மக்களின் தற்போதைய நிலை பற்றியவைகளையே மய்யமாக வைத்துக்கொண்டார்.
கழிப்பிட வசதியில்லை, குடிநீர் கிடைக்கவில்லை, நாங்கள் வந்தால் தீர்த்து வைப்போம் என்றவர், “மகாத்மா காந்தியைத் தேடமுடியுமா. நான் காந்தியைப் போல் வருவேன் என்னை ஊக்கப்படுத்துங்கள். காந்தியைப் போன்று மக்கள் நீதி மய்யத்தில் ஊருக்குப் பத்துபேர் உள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்துங்கள். நான் காந்தியைப் போலச் செயல்படுவேன்” என்று தன்னை பில்டப் கொடுத்த கமல், “மத்தவங்கள எப்படி அடிக்க முடியும் என்று எனக்குத் தெரியும். ஊழல், அதில் அடிப்பேன். ஓட்டுக்கு ஐந்தாயிரம் தருவாங்க. போதாதுன்னு ரூ.5 லட்சம் கேளுங்க. பணத்த வாங்கிட்டு ஓட்டுப் போடாதீங்க. எங்கள் வேட்பாளர்கள் செய்யத்தவறினால் அவர்களை ராஜினாமா செய்யவைப்பேன். மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக் கொடுத்து நானும் ரஜினியும் இணைந்து களமிறங்கத் தயார். விவசாயியின் மனைவியும் விவசாயிதான். விவசாயி பட்டம் அவர்களுக்கும் வழங்க வேண்டும்” என்று முடித்துக் கொண்ட கமல் அடுத்து தூத்துக்குடி விரைந்தார்.