கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் காலியாக உள்ள சுமார் 3 ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளன. அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக திகழும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
தமிழக அரசு நிர்வாகத்தில் ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையிலான மக்களை சந்திக்கும் பணி என்றால் அது கிராம நிர்வாக அலுவலர் பணி தான். மாவட்ட ஆட்சியர் தொடங்கி, முதலமைச்சர் வரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் திரட்டித் தருபவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தான். அந்தப் பணியிடங்கள் காலியாகும் போது உடனடியாக நிரப்பப்பட்டால் தான் தமிழ்நாடு அரசு நிர்வாகம் தடையின்றி செயல்பட முடியும். ஆனால், அதிக எண்ணிக்கையிலான கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நீண்டகாலமாகவே நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் 2,430 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட்டுள்ளன. 2015 முதல் 2018 வரையிலான காலத்தில் நிரப்பப்பட வேண்டிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக 14.11.2017-இல் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 11.02.2018-இல் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்தத் தேர்வு மூலம் 1,822 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து 2019, 2020-ஆம் ஆண்டுகளில் நிரப்பப்பட வேண்டிய காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை 14.06.2019-இல் வெளியிடப்பட்டு, 01.09.2019 போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அதன் மூலம் 608 கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நடப்பாண்டில் நியமிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் 2019-ஆம் ஆண்டின் இறுதியில் 2,896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன. 2020-ஆம் ஆண்டில் 608 பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகு காலியிடங்களின் எண்ணிக்கை 2,288 ஆகக் குறைந்துவிட்டது. நடப்பாண்டில் கடந்த 10 மாதங்களில் 600-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஓய்வு பெற்றிருப்பார்கள் என்பதால் காலியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 12,621 பணியிடங்களில் சுமார் 3,000 பணியிடங்கள் காலியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த காலியிடங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.
அரசு நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பாலமாகச் செயல்படுபவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் தான். சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட மக்களுக்குத் தேவையான அனைத்துச் சான்றிதழ்களும் அவர்கள் மூலமாகத் தான் வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, விவசாயம் சார்ந்த பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அவர்கள்தான் பராமரிக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்களை வழங்குவதாக இருந்தாலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட கணக்கெடுப்புகளை மேற்கொள்வதாக இருந்தாலும் அதன் பின்னணியில் இருந்து செயல்படுபவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் தான். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பது அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கும்.
கிராம நிர்வாக அலுவலர் இல்லாத இடங்களை இன்னொரு கிராமத்திற்கான நிர்வாக அலுவலர்கள் கூடுதலாகக் கவனித்துக் கொள்கின்றனர். இதனால் கிராம நிர்வாக அலுவலர்களுக்குக் கூடுதல் பணிச் சுமை ஏற்படுவது ஒருபுறமிருக்க, பொதுமக்களும் நினைத்த நேரத்தில் தங்களுக்குத் தேவையான சேவையைப் பெற முடிவதில்லை. இந்த நிலையை மாற்றி அனைத்து மக்களுக்கும் எல்லா நேரங்களிலும் வருவாய்த் துறை சார்ந்த சேவைகள் கிடைக்க வேண்டும் என்றால் வி.ஏ.ஓ பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நடப்பாண்டில் எந்தப் பணியாளர் தேர்வும் நடைபெறவில்லை. கரோனா வைரஸ் பாதிப்புகள் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தொகுதி - 4 பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். விரைவாக போட்டித் தேர்வுகளை நடத்தி, கிராம நிர்வாக அலுவலர்களைத் தேர்வு செய்து நியமிப்பதன் மூலம் அரசு நிர்வாகத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.